இந்தியாவின் முதல் அரசு ஆதரவு பெற்ற செயற்கை நுண்ணறிவு (AI) பல்கலைக்கழகம் பெங்களூருவில் தொடங்கப்படும் என்று கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமார் அறிவித்துள்ளார்.
பெங்களூரு சர்வதேச கண்காட்சி மையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற Google I/O Connect India 2026 நிகழ்ச்சியில் பேசிய அவர், கர்நாடகாவை “ஏஐ-நேட்டிவ்” மாநிலமாக மாற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார்.
ஆட்சித் துறை மற்றும் பொதுச் சேவைகளில் ஏஐ தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்பதுடன், ஏஐ திறமைகளை உருவாக்கவும், மேம்பட்ட ஆராய்ச்சிகளை ஊக்குவிக்கவும், கல்வி நிறுவனங்கள், தொழில் துறை மற்றும் அரசாங்கம் ஆகியவற்றுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் இந்த ஏஐ பல்கலைக்கழகம் தொடங்கப்படும் என்றார்.

மேலும், ஏஐ உதவியுடன் கல்வித் துறையில் கற்பித்தல் மேம்படுத்தப்படும் என்றும், நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிறந்த மருத்துவ சேவைகள் வழங்கப்படும் என்றும் கூறினார்.
விவசாயிகளுக்கு ஏஐ அடிப்படையிலான ஆலோசனைகள் வழங்கப்படுவதுடன், அரசு சேவைகள் விரைவாகவும் எளிதாகவும் மக்களிடம் சென்றடையும் வகையில் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என்றார்.
சிறு தொழில் நிறுவனங்களின் போட்டித்திறனையும் ஏஐ மூலம் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
“பெங்களூருவில் தொழில்நுட்பம் என்பது அலுவலக கட்டடங்களுக்குள் மட்டுமே இருப்பதில்லை. அது காபி கடைகளில் நடக்கும் உரையாடல்களிலும், வகுப்பறைகளிலும், ஆராய்ச்சி ஆய்வகங்களிலும் தொடங்கி, பின்னர் புதுமையான நிறுவனங்களாகவும், சில நேரங்களில் யூனிகார்ன் நிறுவனங்களாகவும் வளர்கிறது. இதுவே பெங்களூருவின் தனித்துவம்” என்று சிவக்குமார் கூறினார்.
கர்நாடகா தற்போது இந்தியாவின் மென்பொருள் ஏற்றுமதியில் 40 சதவீத பங்களிப்பை வழங்கி வருவதாகவும், பெங்களூருவில் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் செயல்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கூகுள் நிறுவனத்துடனான உறவை பாராட்டிய அவர், “இந்தியாவில் கூகுளின் 18 ஆயிரம் ஊழியர்களில் 12 ஆயிரம் பேர் பெங்களூருவில் பணியாற்றுகின்றனர். இது நகரத்தின் திறனை வெளிப்படுத்துகிறது” என்றார்.
பெங்களூருவின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்த கூகுளுடன் இணைந்து செயல்பட விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார். “25 ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூருவின் மக்கள் தொகை 70 லட்சமாக இருந்தது. தற்போது அது 1.40 கோடியாக உயர்ந்துள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. அதற்கு தொழில்நுட்பத்தின் மூலம் தீர்வு காண முயற்சி செய்து வருகிறோம்” என்றார்.
இறுதியாக, “ஒன்றாகச் சேர்வது தொடக்கம்; ஒன்றாகச் செயல்படுவது வெற்றி. கர்நாடகாவின் வளர்ச்சிக்கும், நாட்டின் முன்னேற்றத்திற்கும் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். அதற்குத் தேவையான அனைத்து ஆதரவையும் கர்நாடக அரசு வழங்கும்” என்று அவர் அழைப்பு விடுத்தார்.