பெங்களூரு
பெங்களூருவில் ஒரு ஓட்டலில் தம்பதிகளுக்கு இருவரும் வேறு மதத்தினர் என்னும் காரணத்தினால் அறை கொடுக்க மறுக்கப்பட்டது.
ஷகீம் சுபைதா ஹக்கிம் என்பவரும் திவ்யா என்பவரும் கேரளாவை சேர்ந்த தம்பதிகள். திவ்யா இந்து மதத்தையும், ஷகிம் இஸ்லாம் மதத்தையும் பின்பற்றுகிறார்கள். திவ்யாவுக்கு ஒரு நேர்காணல் பெங்களூருவில் இருந்தது. அதற்காக இருவரும் அங்கு வந்து, தங்க இடம் தேடி ஒரு ஓட்டலுக்கு சென்றுள்ளனர். அங்கு ரிஜிஸ்டரில் அவர்கள் பெயரைப் பார்த்த ஓட்டல் வரவேற்பாளர் தங்க இடம் கொடுக்க மறுத்து விட்டார். இருவரும் தம்பதிகள் என்றால் இரு வேறு மதத்தை சேர்ந்தவர்களாக இருக்க முடியாது எனவும் வாதிட்டு இருக்கிறார்.
ஷகிம் என்ன சொல்லியும் அவர் கேட்பதாக இல்லை. போலீசில் புகார் கொடுப்பதாக மிரட்டியும் பயனில்லை. இந்துவும் இஸ்லாமியரும் ஒரே அறையில் தங்ககூடாது என்னும் தன்னுடைய வாதத்திலேயே பிடிவாதமாக இருந்தார். இதனால் வெறுத்துப் போன ஷகிம் தனது மனைவியுடன் வேறு இடத்துக்கு சென்றுவிட்டார். இதை ஒரு பங்களூரு பத்திரிகைக்கு கடிதமாக எழுதியுள்ளார்.
அந்த ஓட்டலின் வரவேற்பாளரை விசாரித்த போது, அந்த ஆணின் பெயர் இஸ்லாமிய பெயர், பெண்ணின் பெயர் இந்துப்பெயர் என்பதால் தனக்கு சந்தேகம் வந்து தங்க இடம் தர மறுத்ததாகக் கூறியுள்ளார். மேலும், அவர்கள் இருவரும் வீட்டை விட்டு ஓடி வந்து தற்கொலை செய்ய எண்ணமிட்டிருந்தால் யார் பொறுப்பேற்பது என வினவவும் செய்தார். அது போல தற்கொலைகள் நடைபெற்றுள்ளதா என கேட்டதற்கு, அது தனக்கு தெரியாதென்றும் ஆனால் நடைபெற வாய்ப்புள்ளது எனவும் பதிலளித்துள்ளார். மேலும் தான் வசித்த ஊரில் இந்து ஆண் இஸ்லாமியப் பெண்ணையும், இஸ்லாமிய ஆண் இந்துப் பெண்ணையும் திருமணம் செய்துக் கொள்வதில்லை எனவும் கூறி உள்ளார்.
அந்த ஓட்டலின் பெயர் ஆலிவ் ரெசிடென்சி. அது பெங்களூருவில் அன்னிபுரம் மெயின் ரோட்டில் உள்ளது நெட்டிசன்கள் கூகுள் ரிவியூவில் அந்த ஓட்டலை கடுமையாக கண்டித்துள்ளது குறிப்பிடத்தக்கது.