பெங்களூரு:

செல்பி எடுக்கும் ஆர்வத்தில் தண்ணீரில் மூழ்கிய நண்பனை கவனிக்காமல் இருந்த சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது.

பெங்களூரு அனுமந்த நகரைச் சேர்ந்தவர் கோவிந்த். ஆட்டோ டிரைவர். இவரது மகன் விஷ்வாஸ் (வயது 17). இவர் பசவனகுடி தேசிய கல்லூரியில் பி.யூ.சி. முதலாம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி என்சிசி பிரிவில் விஷ்வாஸ் சேர்ந்திருந்தார். கடந்த 23ம் தேதி ராமநகர் மாவட்டத்தில் நடந்த என்சிசி முகாமிற்கு விஷ்வாஸ் உள்பட 25 மாணவர்கள் சென்றனர்.

ரவகோண்ட்லு பெட்டா என்ற மலைப்பகுதியில் முகாமிட்டிருந்தனர். விடுமுறை காரணமாக அருகில் உள்ள 10 அடி ஆழம் உள்ள குளத்தில் மாணவர்கள் குளித்தனர். குளித்தபோது மாணவர் ஒருவர் மொபைலில் செல்பி எடுத்தார். செல்பி எடுப்பத்றகாக அனைவரும் குளத்தின் ஓரிடத்தில் கூடியபோது, நீச்சல் தெரியாத விஷ்வாஸ் மட்டும் தண்ணீரில் தத்தளித்து மூழ்கியுள்ளார்.

செல்பி எடுக்கும் ஆர்வத்தில் இருந்த மாணவர்கள் விஷ்வாஸ் மூழ்குவதை கவனிக்கவில்லை. பின்னர் அனைவரும் அருகில் உள்ள கோவிலுக்கு சென்றனர். அங்கு சென்ற பின்னர் தான் விஷ்வாஸ் காணாதது தெரியவந்தது. அப்போது செல்போனில் எடுத்த புகைப்படங்களை பார்த்தபோது விஷ்வாஸ் தண்ணீரில் மூழ்கிய காட்சி பதிவாகியிருந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த மாணவர்கள் ககலிபுரா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசாரும் தீயணைப்பு படையினரும் விரைந்து வந்து குளத்தில் இருந்து விஷ்வாஸ் உடலை மீட்டனர் பின்னர் அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.