கொல்கத்தா; ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மேற்குவங்க அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியின் அமைச்சர் பதவியை பறித்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் ஆசிரியர் நியமன ஊழல் வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறையினர் தொடர் சோதனை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி மற்றும் அர்பிதா முகர்ஜி வீட்டில் ஜூலை 22ஆம் தேதி நடைபெற்ற சோதனையின் போது அர்பிதா முகர்ஜி வீட்டில் ரூ.20 கோடி மதிப்பிலான பணம் கட்டுக்கட்டாக பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ஆவணங்கள் பல போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் கிடைத்த ஆவணங்களைத் தொடர்ந்து மீண்டும் 27ந்தேதி சோதனை நடத்தினர். அப்போது மேலும் ரூ.29 கோடி ரொக்கம் மற்றும் 5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தாவுக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், தொழில்துறை அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியை, அமைச்சர் பதிவில் இருந்து பதவி நீக்கம் செய்து மம்தா அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதுதொடர்பாக மேற்கு வங்க அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்கு வங்க எஸ்எஸ்சி ஆட்சேர்ப்பு ஊழலில் (SSC recruitment scam) குற்றம் சாட்டப்பட்ட பார்த்தா சாட்டர்ஜி, ஜூலை 28-ஆம் தேதி (இன்று) முதல் அமைச்சர் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டார் என்று அறிவித்துள்ளது.