கொல்கத்தா:
பேச்சாளர் பட்டியலில் இருந்து மேற்குவங்கம் நீக்கப்பட்டதால், பிரதமருடனான இன்று நடைபெற உள்ள கலந்துரையாடலை மம்தா பானர்ஜி புறக்கணிப்பார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் ஊரடங்கு தளர்த்தப்படும் நிலையில் அதிகரித்து வரும் வைரஸ் பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து, அனைத்து மாநில முதலமைச்சர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் துணை நிலை கவர்னர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார்.

இதன்படி இன்று ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் பஞ்சாப், கேரளா, உத்தரகண்ட், ஜார்க்கண்ட் உள்ளிட்ட 21 மாநில முதலமைசர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் துணை நிலை கவர்னர்கள் பங்கேற்றனர். தமிழகம், மகாராஷ்டிரா, மேற்குவங்கம், டெல்லி, குஜராத் உள்ளிட்ட 15 மாநில முதலமைச்சர்கள் மற்றும் ஜம்மு – காஷ்மீர் துணை நிலை கவர்னர் ஆகியோருடன் பிரதமர் நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.

இந்நிலையில், நாளை நடைபெறும் கூட்டத்தை மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி புறக்கணிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுகுறித்து திரிணாமுல் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கையில், ‘நாளைய ஆலோசனையின் போது, மம்தாவுக்கு பேச வாய்ப்பு வழங்கப்படவில்லை; இது மேற்கு வங்க மக்களுக்கு பெரும் அவமானம்’ என கூறியுள்ளது. மேலும் ஏற்கனவே மம்தாவுக்கு மத்திய அரசு நெருக்கடி தருவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளது.

இதுகுறித்து மேற்கு வங்க கல்வி அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி, வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், மத்திய அரசு, மேற்கு வங்க மக்களை மீண்டும் அவமானப்படுத்தி உள்ளது. மம்தா பானர்ஜிக்கு பேச வாய்ப்பு வழங்காமல், அமைதியாக இருக்க செய்ய முடிவு செய்துள்ளது. முதலமைச்சர்கள்மாநாட்டில், தனது கருத்துக்களை முன்வைக்க வாய்ப்பு வழங்காமல் இருப்பது ஏற்புடையதல்ல என்று கூறியுள்ளார்.

திரிணாமுல் கட்சி எம்.பி., ககோலி கோஷ் தஸ்திதார் கூறுகையில், முதலமைச்சரை அமைதியாக இருக்க வைத்து, பேச வாய்ப்பு வழங்காமல் புறக்கணிப்பு செய்வது குறித்து மத்திய அரசு விளக்க வேண்டும். முதல்வரை வீடியோ கான்பரன்சிற்கு அழைத்து, அவருக்கு அச்சப்பட்டு அவரை பேசவிடாமல் மத்திய அரசு வைக்கிறதா?’ என கேள்வி எழுப்பி உள்ளார்.

‘கொரோனாவுக்கு எதிரான போரில், பிரதமர் மோடியின் தோல்வியை, மம்தா அம்பலப்படுத்துவார் என மத்திய அரசு கவலை கொள்கிறது’ என முன்னாள் மத்திய ரயில்வே அமைச்சரும், திரிணாமுல் மூத்த தலைவருமான தினேஷ் திரிவேதி தெரிவித்துள்ளார்.