மே.வங்கத்தில் மாநில பா.ஜ.க. தலைவர் திலீப் கோஷுக்கும், மாநில பா.ஜ.க.. இளைஞர் அணி தலைவர் சவுமித்ரா கானுக்கும் ஏழாம் பொருத்தம்.
எம்.பி.யாக இருக்கும் சவுமித்ரா கான், திரினாமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, பா.ஜ.க.வில் சேர்ந்தவர். பா.ஜ.க.. தேசிய துணைத்தலைவர் முகுல்ராயின் ஆசி பெற்றவர்.

சவுமித்ரா கான், மாநில பா.ஜ.க.வின் இளைஞர் அணி தலைவராக நியமிக்கப்பட்ட நாள் முதலே முணகிக்கொண்டிருந்தார்,  மாநில தலைவரான திலீப் கோஷ்.
இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன் , மே. வங்க இளைஞர் அணிக்கு புதிய மாவட்ட தலைவர்களை, சவுமித்ரா கான் நியமித்து ஆணையிட்டார்.
தன்னிடம் ஆலோசனை நடத்தாமல், மாவட்ட இளைஞர் அணி தலைவர்கள் நியமிக்கப்பட்டதால் கோபமும், எரிச்சலும் அடைந்த திலீப் கோஷ், அந்த மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்ட பா.ஜ.க.இளைஞர் அணிகளையும் கூண்டோடு கலைத்து நேற்று உத்தரவிட்டுள்ளார்.
‘’சில காரணங்களால் மாவட்ட இளைஞர் அணி கலைக்கப்பட்டுள்ளது’’ என திலீப் கோஷ் தெரிவித்துள்ளார்.
மே.வங்க மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டபேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பா.ஜ.க.வில் பகிரங்கமாக வெடித்துள்ள கோஷ்டி பூசல், மேலிட தலைவர்களை கவலை அடையச்செய்துள்ளது.
-பா.பாரதி.