மின்ஸ்க்

ஷ்ய நாடான பெலருஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ கொரோனா குறித்துக் கவலைப்படாமல் உள்ளார்.

உலகில் உள்ள அனைத்து நாடுகளும் கொரோனா பரவுதலைக் குறித்து கடும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளன.  பல நாடுகளில் முழு ஊரடங்கு அறிவித்துள்ளது.  மக்கள் கூட்டமாகக் கூடுவது உலகெங்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.  உணவு மற்றும் கேளிக்கை விடுதிகள் உலகெங்கும் மூடப்பட்டுள்ளன.  குறிப்பாக ஐரோப்பாவில் உள்ள நாடுகள் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.

ஆனால் ஐரோப்பாவில் உள்ள பெலருஸ் நாட்டின் அதிபர் கொரோனா குறித்து எவ்வித கவலையும் இன்றி இருக்கிறார்.  சோவியத் யூனியன் உடைந்த போது அதில் ஒரு அங்கமான பெலருஸ் தனி நாடாக உருவானது.  இந்த நாட்டில் 95 லட்சம் மக்கள் உள்ளனர்.  இந்த நாடு, உக்ரைன், போலந்து ரஷ்யா, லிதுனியா, மற்றும் லாத்வியா ஆகிய நாடுகளுக்கு இடையில் உள்ளது.

பெலருஸ் நாட்டில் 94 பேர் கொரோனாவால் பாதிக்கபட்டுளன்ர். ஆனால் பெலருஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளார்.   விளையாட்டுப் போட்டிகள், திரை உலக நிகழ்வுகள் நடந்து வருகின்றன. கடைகள், அங்காடிகள், பார்கள், உணவு விடுதிகள், தேவாலயங்கள் உள்ளிட்ட எதுவும் மூடப்படவில்லை.  அரசும் மூட உத்தரவிடவில்லை.

இது குறித்து அதிபர் அலெக்சாண்டர், “கொரோனா வைரஸ் எனச் சொல்லிப் பயமுறுத்துவது ஒரு வகையான மன நோய் ஆகும். எனவே மக்கள் அச்சப்ப்ட வேண்டாம்,  சானா என்னும் சமுதாயக் குளியல், மது உள்ளிட்ட எந்த ஒரு கேளிக்கையையும் நிறுத்த வேண்டாம்.  தொடர்ந்து மகிழ்வுடன் இருங்கள்” என மக்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்.