டெல்லி: தேர்தல் பிரசாரத்தில் நாகரிகத்தை கடைபிடியுங்கள்! அரசியல் கட்சிகளுக்கு தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் அறிவுரை கூறினார்.
தற்போதுள்ள நாடாளுமன்றத்தின் 17-வது மக்களவைக்கான காலம் வருகிற ஜூன் 16ந்தேதியுடன் முடிவடைகிறது. அதற்குள் தேர்தல் நடைபெற்று 18வது மக்களவை அமைக்கப்பட வேண்டும். இதனால் 18-வது மக்களவைக்கான தேர்தல் வருகிற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற்று ஜூன் 4ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இரதற்கான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் மார்ச் 16ந்தேதி மாலை வெளியிட்டார்.
இந்த நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடத்தப்படுகிறது. அத்துடன், அருணாச்சல பிரதேசம், ஆந்திரா, ஒடிசா, சிக்கிம் மாநில சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டத் தேர்தல் 21 மாநிலங்களில் ஏப்ரல் 19ஆம் தேதியும், இரண்டாம் கட்டத் தேர்தல் 13 மாநிலங்களில் ஏப்ரல் 26ஆம் தேதியும், மூன்றாம் கட்டத் தேர்தல் 12 மாநிலங்களில் மே 7ஆம் தேதியும், நான்காம் கட்டத் தேர்தல் 10 மாநிலங்களில் மே 13ஆம் தேதியும், ஐந்தாம் கட்டத் தேர்தல் 8 மாநிலங்களில் மே 20ஆம் தேதியும், ஆறாம் கட்டத் தேர்தல் 7 மாநிலங்களில் மே 25ஆம் தேதியும், ஏழாம் கட்டத் தேர்தல் 8 மாநிலங்களில் ஜூன் 1ஆம் தேதியும் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ந்தேதி முதல்கட்ட தேர்தலின்போது வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தேர்தல்8 ஆணையர் தேர்தல் பரப்புரையில் அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள், அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள், நாகரிகமாக நடந்தகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார். மேலும், தேர்தல் பரப்புரையில் ஈடுபடுவோர் யாருடைய தனிப்பட்ட வாழ்க்கையையும் விமர்சிக்க கூடாது என்றும் சாதி, மதத்தை வைத்து பரப்புரை செய்ய கூடாது என கண்டித்ததுடன், தேர்தல் பிரசாரத்தில் வெறுப்பு பேச்சு கூடாது என்று கூறினார்.
மேலும், தேர்தல் சமயங்களில் வதந்தி பரப்புவது தேர்தல் ஆணையத்துக்கு பெரும் சவாலான காரியமாக உள்ளதாகக் கூறிய அவர், தவறான செய்திகளை சமூக வலைதளத்தில் இருந்து நீக்க மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அதிகாரம் உண்டு என்றும் பொய் எது, உண்மை எது என்ற விவரங்கள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் தெரிவிக்கப்படும் எனவும் கூறினார்.
சமூக வலைதளங்களில் கருத்து கூற உரிமை உள்ளது என்றாலும் பொய் செய்திகளை பரப்ப வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டார். நட்சத்திர பேச்சாளர்கள் பேசும்போது ஒழுங்கை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுரை கூறினார்.