டெல்லி

மனித இனத்தை பேரழிவிற்கு உள்ளாக்கி வரும் கொரோனா வைரஸ் விலங்குகளையும் விட்டு வைக்கவில்லை. நாடு முழுவதும் உள்ள உயிரியல் பூங்காக்களை முழுக் கண்காணிப்பில் வைத்திருக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

அமெரிக்காவின் புரோங்க்ஸ் உயிரியல் பூங்காவில் உள்ள புலிக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் சார்பில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

“நாடு முழுவதும் உள்ள உயிரியல் பூங்காவில் விலங்குகள் நடமாட்டம் கண்காணிக்கப்பட வேண்டும். அதன் பணியாளர்கள் உச்சகட்ட எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்” எனவும்  உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் டெல்லி உயிரியல் பூங்காவின் இயக்குனர் சுனீஷ் பக்சே விலங்குகளின் பாதுகாப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

“விலங்குகளின் செயல்கள் மற்றும் பழக்க வழக்கங்கள் 24 மணிநேரமும் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உயிரியல் பூங்காவிற்குள் நுழையும் வாகனங்கள் பொட்டாசியம் பெர்மாங்கனேட் திரவத்தால் ஸ்ப்ரே செய்யப்பட்டே அனுமதிக்கிறோம்.

விலங்குகளின் உணவிற்காக வழங்கப்படும் இறைச்சிகளும் பலமுறை தரம் சோதிக்கப்பட்டே தரப்படுகின்றன.

பூங்காவின் நுழைவு வாயிலிலேயே கிருமிநாசினி, லிக்விட் சோப் ஆகியவை வைக்கப்பட்டுள்ளன.

கால்நடை மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு மிகச் சிறந்த பாதுகாப்புக் கவசங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இறைச்சி விற்பனையாளர், ஓட்டுநர்கள் என அனைவரும் சோதனைக்கு உட்படுத்திய பின்னரே அனுமதிக்கப் படுகின்றனர்.

எனவே டெல்லி உயிரியல் பூங்கா மிகச் சிறந்த பாதுகாப்பில் உள்ளது” என சுனீஷ் பக்சி தெரிவித்துள்ளார்.