மும்பை: இந்திய டெஸ்ட் அணியின் துவக்க வீரர் பிரித்வி ஷா மற்றும் இதர இரண்டு நபர்களின் மீதான பின்தேதியிடப்பட்ட தடையாணையை கையளித்தது பிசிசிஐ.
பிசிசிஐ அமைப்பால் தடைசெய்யப்பட்ட போதை மருந்தைப் பயன்படுத்தினார்கள் என்பதற்காக இந்த தடையாணை கையளிக்கப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி 22ம் தேதி, இந்தூரில், சையது முஷ்டாக் அலி கோப்பை போட்டியின்போது தனது சிறுநீரக மாதிரியை சோதனைக்கு அளித்திருந்தார் பிரித்வி ஷா. அந்த சிறுநீர் மாதிரியில் தடைசெய்யப்பட்ட டெர்புடலின் என்ற வேதிப்பொருள் கலந்திருந்தது கண்டறியப்பட்டதால், அவர்மீது பிசிசிஐ அமைப்பின் விதிமுறைகளை மீறியதாக குற்றம் சுமத்தப்பட்டது.
ஆனால், தான் இருமலுக்காக மருத்துவர் பரிந்துரையில்லாமல் கடையில் மருந்து வாங்கி பயன்படுத்தியதாக வாக்குமூலம் அளித்தார் பிரித்வி ஷா.
அவரின் வாக்குமூலத்தில் திருப்தியடைந்த பிசிசிஐ நிர்வாகம், தான் விதிக்கும் 8 மாதகால தடையாணையை, சிறுநீர் மாதிரி பெறப்பட்ட பிப்ரவரி 22ம் தேதிக்கு பின்தேதியிட்டு வழங்கியது. இதனடிப்படையில் பார்த்தால் அவரின் தடை வரும் நவம்பர் மாதம் 15ம் தேதி நிறைவடைகிறது.