சென்னையில் உள்ள பிரபல ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் செயல்பட்டு வந்த மதுபானக் கூடங்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டு அவற்றுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், தாஜ் கிளப் ஹவுஸ், ரட்டா சோமர்செட், ராடிசன் ப்ளூ, ஹயாத் ரீஜென்சி, தி பார்க் ஆகிய 5 நட்சத்திர விடுதிகளில் செயல்பட்டு வந்த மதுபானக் கூடங்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
நட்சத்திர விடுதிகளில் தங்கும் வெளிநாட்டினர் மற்றும் இந்தியாவில் குடியிருக்கும் வெளிநாட்டினர் தவிர பர்மிட் உள்ள இந்திய குடிமக்களுக்கு மட்டும் வரையறுக்கப்பட்ட இடத்தில் மது அருந்த அனுமதிக்கும் எப்.எல்.3 உரிமத்தை தவறாகக் பயன்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது.
இதனையடுத்து நடைபெற்ற சோதனையில் அனுமதிக்கப்பட்ட நபர்களுக்கு தவிர வெளியாட்களுக்கும் மதுபானங்களை விற்பனை செய்ததற்காக இந்த நட்சத்திர விடுதிகளின் மதுபான கூடங்களின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை தெரிவித்துள்ளது.