முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிஷெல் ஒபாமா வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறினாலும், அவர்கள் தங்கள் பெயரில் ஒரு அறக்கட்டளையைத் தொடங்கி அதன் மூலம் பொது மக்களுக்குத் தங்கள் சேவையைத் தொடர்ந்து செய்வதாக அறிவித்துள்ளனர்.
“நமது நாட்டை முன்னேற்றும் கடமையில் இருந்து பின்வாங்க மாட்டோம், நாங்கள் சக குடிமக்களாக இருந்து அந்த முயற்சியில் உங்களுடன் சேர்ந்து பணிபுரிவோம்,” என்று இணையத்தில் வெளியிடப்பட்ட வீடியோவில் அமெரிக்காவின் 44 வது ஜனாதிபதியான ஒபாமா வெள்ளிக்கிழமையன்று கூறினார்.
சிகாகோ, தெற்கு பகுதியில் ஜனாதிபதி மையத்திற்கான அடித்தளத்தை ஒபாமா அறக்கட்டளை அமைத்துக் கொண்டிருக்கிறது, அங்கு அது நகரம் மற்றும் நாடு முழுவதும் உள்ள வெவ்வேறு வளர்ச்சித் திட்டங்களோடு ஒன்று சேர்ந்து பணிபுரியும்.
சமூக மாற்றத்தை கொண்டு வரும் குடியுரிமை மற்றும் சமூகத்திற்கான பங்களிப்பு என்ற நோக்கத்துடன் அறக்கட்டளை செயல்படும்.
எட்டு ஆண்டுகளுக்கு நாட்டை வழிநடத்திய “முதல் குடும்பம்”, தற்போது கிடைத்துள்ள நேரத்தை, எளிதாகவும் அமைதியாகவும் கழிக்க எண்ணுகிறது.
“முதலில், நாங்கள் ஒரு சிறிய இடைவெளியை எடுத்து கொள்ளப் போகிறோம்,” என்று மிஷெல் ஒபாமா வீடியோவில் கூறினார். “பல நாட்களுக்குப் பிறகு ஒரு வழியாக நன்றாகத் தூங்கி எங்கள் குடும்பத்துடன் நேரத்தை கழிக்கப் போகிறோம்.”
வெள்ளிக்கிழமை ட்ரம்ப்பின் பதவியேற்பு விழாவிற்குப் பிறகு உடனடியாக, பாம் ஸ்பிரிங்ஸிற்கு, செல்வதாக ஒபாமா குடும்பம் திட்டமிட்டுள்ளனர். அங்கு வேறுபல முன்னாள் ஜனாதிபதிகளும் அலுவலக நேர இறுக்கத்திலிருந்து தப்பித்து குடும்பத்துடன் நேரம் செலவழிக்க சென்றதாகவும் கூறப்படுகிறது.
ஒபாமா ஓய்விற்கு பிறகு பொதுச் சேவையில் ஈடுபடப் போவதை பலரும் வரவேற்றுள்ளனர்.