சென்னை,
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு தேர்தல் விதிகள் கொண்டு வர அதிகாரம் உள்ளது, இந்த விதிகள் இந்திய பார் கவுன்சில் ஒப்புதலை பொறுத்தது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறி உள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர் தேர்தல் மார்ச் 28-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் பிப்ரவரி 1-ம் தேதி தொடங்கி உள்ளது.
வேட்பு மனு தாக்கல் செய்ய பிப்ரவரி 15-ம் தேதி கடைசி நாளாகும். பிப்ரவரி 22-ம் தேதி வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கு கடைசி நாள். வாக்குப்பதிவு மார்ச் 28ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகம் புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தலை கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதி நீதிபதி அக்பர் அலி நியமிக்கப்பட்டு உள்ளார்.
இந்த முறை பார் கவுன்சில் தேர்தல் அரசியல் கட்சிகள் பங்குபெறும் சட்டமன்ற தேர்தலைவிட,பல மடங்கு பணம் விளையாடும் தேர்தலாக உள்ளது. இதன் காரணமாக பார் கவுன்சில் அதிகாரத்தை பிடிக்க பலர் மும்முரமாக களமிறங்கி உள்ளனர்.
இதன் காரணமாக, பார் கவுன்சில் தேர்தல் விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் கடந்த மாதம் 24ந்தேதி அன்று நடைபெற்ற விசாரணயின்போது, இந்த வழக்கில் நாங்கள் ஏதேனும் உத்தரவு பிறப்பிக்க முடியுமா என்பது குறித்து உச்சநீதி மன்றத்தில் விளக்கம் கேட்டு தெரிவியுங்கள் என்று கூறி வழக்கின் விசாரணையை பிப்ரவரி 5ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
அதன்படி இன்று பார் கவுன்சில் விதிகள் மீதான வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இரு தரப்பினரின் வாதங்களையும் கேட்ட உயர்நீதி மன்றம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு தேர்தல் விதிகள் கொண்டு வர அதிகாரம் உள்ளது, இந்த விதிகள் இந்திய பார் கவுன்சில் ஒப்புதலை பொறுத்தது என்று கூறி உள்ளது.