புதுடெல்லி: துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு வழக்கறிஞர்கள் ஒன்றும் பயங்கரவாதிகள் அல்லர் என்று காட்டமாக கூறியுள்ளது இந்திய பார் கவுன்சில்.
டெல்லியின் ஒரு நீதிமன்ற வளாகத்தில், வழக்கறிஞர்களுக்கும், போலீசாருக்கும் நடைபெற்ற மோதலின்போது, வழக்கறிஞர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில், சில வக்கீல்கள் காயமடைந்தனர்.
இதனைக் கண்டித்து டெல்லி உட்பட, நாட்டின் பல பகுதிகளில் வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நிலைமையை திசைதிருப்ப, காவல்துறையினரும் டெல்லியில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இது நாடு முழுவதம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
பிரபலங்களில் சிலர் காவல்துறையினருக்கு ஆதரவாகவும், சிலர் வழக்கறிஞர்களுக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பார் கவுன்சில், துப்பாக்கிச் சூடு சம்பவத்தை கடுமையாக சாடியுள்ளது.
துப்பாக்கிச் சூடு நடத்தும் அளவிற்கு வக்கீல்கள் ஒன்றும் பாகிஸ்தான் தீவிரவாதிகள் அல்லர். இச்சம்பவத்திற்கு காரணமான போலீசார் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் வரை, அமைதியான முறையில் தர்ணாப் போராட்டம் நடத்தும் சூழல் ஏற்படும். மேலும், இந்த விவகாரத்தில் பார் கவுன்சில் ஒற்றுமையுடன் செயல்படும் என்று கூறப்பட்டுள்ளது.