சென்னை: சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் இன்று தொடங்க உள்ள ‘பபாசி’ 45வது புத்தக கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை தொடங்கி வைக்கிறார்.

தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் (பபாசி) நடத்தும் 45வது புத்தக் கண்காட்சி  சென்னை நந்தனம் ஒய் எம் சி ஏ மைதானத்தில் நடைபெற உள்ளது. ஏற்கனவே ஜனவரி 6 முதல் 23 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், கொரோனா 3வது பரவல் காரணமாக தமிழகஅரசு அறிவித்த ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளால் ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது தளர்வுகள் அளிக்கப்பட்டு, கண்காட்சிகளும் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், 45வது புத்தக் கண்காட்சி இன்று (16ம் தேதி)  தொடங்கி மார்ச் 6ஆம் தேதி வரை 19 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த கண்காட்சி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை திறந்து வைக்கிறார்.

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக புத்தக கண்காட்சிக்கு கலந்து கொள்வோர் ஆன்லைன் முன்பதிவு செய்து அனுமதிச் சீட்டுகளை பெற்றுக்கொள்ளலாம் என தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

புத்தகக் கண்காட்சி தொடக்க விழாவில் 2022-ம் ஆண்டுக்கான ‘முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி பொற்கிழி’ விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்பாளிகளுக்கும்,சிறந்த பதிப்பாளர்களுக்கான விருதுகளையும் முதல்வர் ஸ்டாலின் வழங்குகிறார்.  இந்த தொடக்க விழா பபாசி புரவலர் நல்லி குப்புசாமி செட்டி தலைமையில் நடைபெறுகிறது.

இந்த தொடக்க விழாவில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்புரையாற்றுகிறார். பபாசி தலைவர் எஸ்.வயிரவன் வரவேற்கிறார். செயலர் எஸ்.கே.முருகன் நன்றி கூறுகிறார்.