சென்னை:
தமிழகத்தில் பேனர் காரணமாக சுபஸ்ரீ என்ற இளம்பெண் மரணம் அடைந்ததைத் தொடர்ந்து சென்னை உயர்நீதி மன்றத்தில் கடும் எச்சரிக்கையைத் தொடர்ந்து, ஆங்காங்கே காணப்பட்ட பேனர்கள் அரசு அதிகாரிகளால் அகற்றப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தங்களின் தொழில் பாதிக்கப்படுவதாக கூறி பேனர் தயாரிப்பு நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
சென்னை பள்ளிக்கரனை பகுதியில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் வைத்த பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ மரணம் அடைந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பேனர் வைத்தவரை கைது செய்யாத காவல்துறை, பேனர் தயாரித்த நிறுவனத்துக்கு சீல் வைத்தது.
இந்த வழக்கில் சென்னை உயர்நீதி மன்றம், தமிழக அரசை கடுமையாக சாடிய நிலையில், சுபஸ்ரீ மரணத்துக்கு காரணமானவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சுபஸ்ரீக்கு வழங்கப்படும் ரூ.5 லட்சம் நஷ்டஈட்டை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வசூலிக்க வேண்டும் என்று அதிரடி உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து சென்னை உள்பட மாநிலம் முழுவதும் அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்களை காவல்துறையினர் உதவியுடன் அதிகாரிகள் அகற்றி வருகின்றனர். மேலும் அரசியல் கட்சிகளும் பேனர் வைப்பது குறித்து தங்களது கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தி உள்ளது.
இதன் காரணமாக பேனர் தொழில் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. பேனர் தொழிலை நம்பி உள்ள சுமார் 10ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.
இதையடுத்து, பேனர் தயாரிப்பு நிறுவனங்கள் சார்பில், தங்கள் தொழில் பாதிக்கப்படுவதாக கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
அவர்கள் தாக்கல் செய்த மனுவில், சுபஸ்ரீ மரணத்துக்கு காரணமானவர்களை விட்டுவிட்டு தங்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து உள்ளனர். . சென்னை மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கைக்கு தடை விதிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.