மும்பை
தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் கடந்த ஆறு மாதங்களில் ரூ.55356 கோடி கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
வங்கிகள் தங்களுடைய ஆண்டு வரவு செலவு அறிக்கையில் பல வருடங்களாக தொடர்ந்துக் கொண்டுள்ள வாராக் கடன்களை காட்டுவதில்லை. அவற்றை தள்ளுபடி (Write off) செய்ததாக காட்டுவது வழக்கம். அதன் பிறகு அந்தக் கடன்கள் வங்கிக் கணக்கில் காட்டப் படுவது கிடையாது. மீண்டும் வசூலானால் மட்டுமே அது வரவாக காட்டப்பட்டுகிறது. இவ்வாறு தள்ளுபடி செய்யப்பட்ட கடன்கள் குறித்து தகவல் அறியும் சட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட மனு ஒன்றுக்கு ரிசர்வ் வங்கி பதில் அளித்துள்ளது.
அந்த பதிலில், ”இந்த கணக்கு ஆண்டான 2017-18ன் முதல் ஆறு மாதங்களில் ரூ.55326 கோடி கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இவைகள் பல வருடங்களாக வாராக்கடன்களாக இருந்தவைகள் ஆகும். இந்த கடன் வாங்கியவர்களில் பலரும் திவாலானவர்களாக தங்களை அறிவிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இது கடந்த வருடம் இதே கால கட்டத்தில் தள்ளுபடி செய்யப் பட்டதை விட 54% அதிகமாகும்.” என தெரிவித்துள்ளது. அது தவிர வருட வாரியாக தள்ளுபடி செய்யப்பட்ட கடன்களின் விவரங்களையும் அறிவித்துள்ளது.
அதன்படி கடந்த 9.5 ஆண்டுகளில் சுமார் ரூ.360912 கோடி அளவுக்கு கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இந்தக் கடன்கள் அனைத்தும் கணக்குப் புத்தகங்களில் இருந்து நீக்கப்பட்ட போதிலும் திரும்பப் பெறும் நடவடிக்கைகளில் ஈடு பட்டிருக்கும் என வங்கிகள் ஏற்கனவே தெரிவித்துள்ளன. வங்கிகள் ஈடாக வைத்திருக்கும் சொத்துக்களின் மூலம் இந்த கடன்கள் வசூலிக்கப்படும் என வங்கி மேலாளர் ஒருவர் கூறி உள்ளார். ஆனால் அந்தச் சொத்துக்களின் மதிப்பு கடன் தொகையை விட அதிகமாகும் போது தான் தள்ளுபடி செய்ததாக கணக்கு எழுதுவது வழக்கம் என பொருளாதார வல்லுனர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பொதுத்துறை வங்கிகள் (அரசுடமையாக்கப் பட்ட வங்கிகளில் ஒவ்வொரு வருடமும் தள்ளுபடி செய்யப்பட்ட கடன்களின் விவரம் வருமாறு
வருடம் ரூ. (கோடிகளில்)
2007-08 8019
2008-09 7461
2009-10 11185
2010-11 17794
2011-12 15551
2012-13 27231
2013-14 34409
2014-15 49018
2015-16 57585
2016-17 77123
2017-18 (அரையாண்டு) 55356
மொத்தம் ரூ. 360912 கோடிகள்
மேலே குறிப்பிட்டுள்ள தகவலின் படி வருடா வருடம் தள்ளுபடி செய்யப்படும் கடன் தொகை அதிகரித்துக் கொண்டே செல்வது குறிப்பிடத்தக்கது