சென்னை: வங்கிகள் தனியார்மயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மார்ச் 15, 16 ஆகிய தேதிகளில் வேலை நிறுத்தம் செய்ய போவதாக அகில இந்திய ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

காப்பீட்டுத் துறையில் 74% அன்னிய முதலீடுக்கு அனுமதி அளிக்கப்படும், எல்.ஐ.சி. பங்குகள் தனியாருக்கு விற்கப்படும், 2 பொதுத் துறை வங்கிகள் தனியார் மயமாக்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு வங்கி ஊழியர்கள் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன.

இந் நிலையில், தனியார்மயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, வங்கி தொழிற்சங்கங்கள் 2 நாள் வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளன. மார்ச் 15ம் தேதி முதல் 2 நாள் இந்த போராட்டம் நடைபெறும் என்று அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொது செயலாளர் வெங்கடாசலம் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: 2019ம் ஆண்டு அரசானது ஏற்கனவே ஐடிபிஐ வங்கியை தனியார்மயமாக்கி உள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் 14 பொதுத்துறை வங்கிகளை மத்திய அரசு இணைத்துள்ளது. ஆகையால், அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க கூட்டத்தில் வங்கிகளின் தனியார்மயமாக்குவதற்கான அரசின் முடிவை எதிர்க்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

மேலும், ஐடிபிஐ மற்றும் 2 பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குதல் உள்ளிட்ட அறிவிப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த நடவடிக்கைகள் அனைத்தும் பிற்போக்குத்தனமானவை என்பதால் எதிர்க்க வேண்டியது தேவை அவசியம். உறுப்பினர்களின் ஆலோசனைகளுக்கு பிறகு மார்ச் 15 மற்றும் மார்ச் 16 ஆகிய 2 நாட்கள் வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது என்று கூறினார்.