டெல்லி: பொதுத்துறை வங்கிகள் மாணாக்கர்களுக்கான கல்விக் கடனுக்கான உத்தரவாத வரம்பை ரூ.10லட்சமாக உயர்த்த திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு மத்தியஅரசு அனுமதி வழங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதுவரை மாணாக்கர்களின் கல்விக் கடனுக்கான உத்தரவாத வரம்பை ரூ.7.5 லட்சமாக இருந்து வந்த நிலையில், தற்போது, அதை ரூ.10 லட்சமாக மத்திய அரசு உயர்த்த வாய்ப்புள்ளது. ஏற்கனவே வங்கிகளில் கடன் அனுமதி பெற கால தாமதம் ஆகிறது என்ற குற்றச்சாட்டுக்கள் கூறப்படும் நிலையில், தற்போது உத்தரவாத வரம்பு ரூ.10 லட்சம் ஆக உயர்த்த திட்டமிடப்பட்டு உள்ளது. த்திய அரசு உந்துதலின் பின்னணியில் பொதுத்துறை வங்கிகள் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
ஏழை, எளிய மாணவர்கள் தங்களது உயர்கல்வியைத் தொடர மத்திய, மாநில அரசுகள் வங்கிகள் மூலம் கடன் உதவி செய்து வருகின்றன. நன்றாக கல்வி கற்கும் மாணவர்கள், பணம் இல்லாததால் கல்வியை நிறுத்திக் கொள்ளக் கூடாது என்பதற்காக, மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி மூலம் கல்விக் கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் கல்விக் கடனைப் பெற மாணவர்கள் இந்தியக் குடியுரிமை பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்கும்போது படிப்பிற்கான அட்மிஷன் கார்டு வைத்திருக்க வேண்டும்.கலை மற்றும் அறிவியல் பட்டப் படிப்புகள் உள்ளிட்ட அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் கல்விக் கடன் வழங்கப்படுகிறது. அங்கீகரிக்கப்பட்ட கல்லுாரி மற்றும் பாடப்பிரிவை தேர்ந்தெடுத்து படிப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்பது உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளன.
மேலும், கல்விக்கடன் பெற, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல், கல்லுாரி அட்மிஷன் கார்டு, பாடப்பிரிவுக்கான முழு கட்டண விவரம், இரண்டு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, பெற்றோர் ஆதார் கார்டு, பான் கார்டு, அவர்களின் வேலைக்கான அடையாளம், குடியிருப்பு சான்றிதழ் உள்ளிட்டவை கேட்கப்படுவதுடன், கடனுக்கான உத்தரவாதமும் கோரப்படுகிறது.
இந்த உத்தரவாதம் இதுவரை ரூ.7.5லட்சம் மதிப்பாக இருந்து வந்த நிலையில் தற்போது, கல்விக் கடனுக்கான உத்தரவாத வரம்பை ரூ.10 லட்சமாக உயர்த்த பொதுத்துறை வங்கிகள் முடிவு செய்துள்ளன. இது மாணாக்கர்கள் மற்றும் பெற்றோரிகளிடையே அச்சத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளன.