சென்னை: நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 3 மண்டலங்களில் வங்கி தேர்வுகளுக்கான பயிற்சி மையங்கள் அமைப்பதற்கான டெண்டரை தமிழ்நாடு அரசு வெளியிட்டு  உள்ளது.

தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள நான் முதல்வர் திட்டம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக இளைஞர் சமுதாயம் இந்த திட்டத்தை பயன்படுத்தி தங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி வருகின்றன. சமீபத்தில் நடைபெற்ற நான் முதல்வன் திட்டத்தின் வெற்றி விழாவில் முதலமைச்சர், கலந்துகொண்டு,   வெற்றி நிச்சயம் என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்து  உரையாற்றினார். அப்போது,  நான் முதல்வன் திட்டத்தால் இதுவரைக்கும் 41 லட்சம் மாணவ – மாணவியர் பயனடைந்திருக்கிறார்கள். நல்ல வேலைவாய்ப்புகளை பெற்று உயர்ந்திருக்கிறார்கள். மாணவர்களின் வெற்றிதான் நான் முதல்வன் திட்டத்தின் வெற்றி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமையுடன் கூறினார்.

இந்த நிலையில்,   நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்க, பயிற்சி மையங்களை தேர்வு செய்ய தமிழ்நாடு அரசு டெண்டர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி  3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள் அமைக்கப்பட உள்ளது.

அதன்படி,   நான் முதல்வன் திட்டத்தின் கீழ் சென்னை, மதுரை, கோவை மண்டலங்களில் வங்கி தேர்வுகள் மற்றும்  மத்திய  அரசின் போட்டி தேர்வுகளுக்கு (SSC, IBPS, RRB) பயிற்சி அளிக்க பயிற்சி மையங்களை தேர்வு செய்ய தமிழ்நாடு அரசு டெண்டர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னை மண்டலத்தில் 300 மாணவர்களுக்கும், மதுரை, கோவை மண்டலத்தில் தலா 350 மாணவர்களுக்கு கட்டணமின்றி தங்குமிடம், உணவு பயிற்சி அளிக்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.