மும்பை: ஜனவரி 30, 31-ந்தேதிகளில் நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் நடைபெறும் என  வங்கி சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பு அறிவித்து உள்ளது. இதன் காரணமாக தொடர்ந்து 4 நாட்கள் வங்கி செயல்படாத நிலை ஏற்பட்டுள்ளருது.

மும்பையில், வங்கி சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் வங்கி ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மத்திய அரசின் மற்றும் வங்கிகள் தனியார் மயம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. மேலும் தங்களது கோரிக்கைகள் தொடர்ந்தாக மத்திய அரசு எந்தவித பதில் அளிக்காதது தொடர்பாகவும் கூறப்பட்டது.

இதைத்தொடர்ந்து, இந்த மாதம் ,  30 மற்றும் 31-ந் தேதிகளில் நாடு முழுவதும் பொதுத்துறை வங்கிகளின் ஊழியர்கள், அதிகாரிகள் ஆகியோர் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது என்று முடிவு செய்யப்பட்டது என செய்தியாளர்களை சந்தித்த வங்கிகளின் கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.

மேலும், எங்கள் கோரிக்கைகள் தொடர்பாக,  இந்திய வங்கிகள் சங்கம் (IBA) கடிதம் அனுப்பியும் எந்த பதிலும் வராததால், எங்கள் போராட்டத்தை மீண்டும் தொடங்கவும், ஜனவரி 30 மற்றும் 31 ஆம் தேதிகளில் வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.  AIBEA பொதுச் செயலாளர் சி.எச். வெங்கடாசலம் கூறினார். வேலைநிறுத்தம் குறித்து வங்கி சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பு துணை பொதுச்செயலாளர் நரேந்திர சவுகான் கூறும்போது,  சம்பள உயர்வு, வாரத்தில் 5 நாட்கள் வேலை, ஓய்வூதியத்தில் மாற்றம், தேசிய ஓய்வூதிய திட்டத்தை கைவிடுதல், புதிய ஊழியர்கள் தேர்வு ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகிறோம். இந்த கோரிக்கைகளை இந்திய வங்கிகள் சங்கம் புறக்கணித்ததால், வேலைநிறுத்தத்தை தவிர வேறு வழி இல்லை.

இதனால் 4 நாட்கள் வங்கிகள்  செயல்படாத சூழல் ஏற்பட்டுள்ளது.

ஜனவரி  28-ந் தேதி 4-வது சனிக்கிழமை என்பதாலும், 29-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் விடுமுறை நாட்கள் ஆகும். அதைத்தொடர்ந்து, 30, 31-ந் தேதிகளில் வேலைநிறுத்தம் நடப்பதால், தொடர்ந்து 4 நாட்கள் வங்கிச்சேவை பாதிக்கப்படும் என்று தெரிகிறது.