டில்லி

டந்த 2018-19 ஆம் ஆண்டு வங்கி மோசடிக் குற்றங்கள் 6735 ஆக குறைந்துள்ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

கடந்த சில வருடங்களாக வங்கி மோசடிக் குற்றங்கள் அதிகமாக நிகழ்ந்து வந்தன. இதனால் வங்கிகளில் வாராக்கடன்கள் அதிகரித்தன. பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் மோசடி செய்த விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெகுல் சோக்சி உள்ளிட்ட பல செல்வந்தர்கள் நாட்டை விட்டு ஓடி விட்ட்னர். அவர்களை மீண்டும் இந்தியாவுக்கு கொண்டு வந்து விசாரணை நடத்த அரசு சார்பில் வழக்குக நிலுவையில் உள்ளன.

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று மாநிலங்களவையில் ஒரு கேள்விக்கு எழுத்து மூலமாக பதில் அளித்தார். அப்போது அவர், “கடந்த 2018-19 ஆம் வருடம் வங்கி மோசடிக் குற்றங்கள் மிகவும் குறைந்துள்ளன. ரூ. 1 லட்சத்துக்கு மேல் நடந்த மோசடிக் குற்றங்கள் 6735 ஆக குறைந்துள்ளன. அதற்கு முந்தைய வருடத்தில் இந்த குற்றம் 9866 ஆக இருந்தன. சென்ற வருடம் ரூ.2836 கோடி மோசடி நடந்துள்ள நிலையில் அதற்கு முந்தைய வருடம் ரூ.4288 கோடி மோசடி நடந்துள்ளது.

முன்பு இருந்த வங்கிக் கடன் கொள்கைகள் தற்போது மாற்றப்பட்டுள்ளன. அத்துடன் ஷெல் நிறுவனங்கள் என அழைக்கப்படும் போலி நிறுவனங்கள் வெகுவாக குறைந்துள்ளன. இந்த நிறுவனங்கள் கடன் வாங்கி விட்டு அந்த நிதியை வேறு நிறுவனத்துக்கு மாற்றி விட்டு கடனை திருப்பி செலுத்தாமல் இருந்தன. இதன் நிறுவனர்கள் போலி பெயரில் இயங்கி வந்ததால் பாஸ்போர்ட் விவரங்கள் அறியப்படாததால் லுக் அவுட் நோட்டிஸ் பிறப்பிக்க முடியாத நிலை இருந்தது.

தற்போது நிறுவனங்களின் உரிமையாளர்களின் முழு விவரமும் பெற்ற பிறகு கடன் வழங்கப்படுகிறது. அத்துடன் வங்கிகளுக்கு லுக் அவுட் நோட்டிஸ் வழங்கி அதை சுற்றரிக்கையாக அனைத்து துறைகளுக்கும் அனுப்ப உரிமை அளிக்க பட்டுள்ளது. இதன் மூலம் வாராக்கடன் உருவாகுதல் தடுக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள நிலையில் பணம் செலுத்த ஒரு முறை தவறினாலும் மோசடி என்னும் நிலை உள்ளது.

மேலும் ரிசர்வ் வங்கி கடன் வழங்கும் போது ஈடாக பெற வேண்டிய சொத்துக்கள் குறித்து பல புதிய விதிகளை அறிவித்துள்ளது. அத்துடன் அனைத்து பரிமாற்றங்களும் டிஜிடல் முறையில் நடைபெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதால் வங்கிகளில் ஊழியர்கள் மோசடி செய்வது பெருமளவில் குறைந்துள்ளது.” என தெரிவித்துள்ளார்.