புதுடெல்லி:
குறுகிய கால கடன்களுக்கான வட்டியை ரிசர்வ் வங்கி குறைத்ததை, வங்கிகள் பின்பற்றியுள்ளனவா என்பதை கண்காணிக்க மத்திய நிதித்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
ரிசர்வ் வங்கி மாதத்துக்கு 2 முறை நிதிக்கொள்கை மறு சீராய்வு அறிக்கை வெளியிடுகிறது. இதில் 6 பேர் கொண்ட குழுவில் எடுக்கப்பட்ட பெரும்பான்மை முடிவின்படி வட்டி விகிதம் உள்ளிட்ட நிதிக்கொள்கைகள் வெளியிடப்படுகின்றன.
கடந்த ஜூன் மாதம் ரிசர்வ் வங்கி தனது நிதிக் கொள்கை கூட்டங்களில் எடுக்கப்பட்ட முடிவின்படி மூன்றாவது முறையாக அரசு வங்கிகளுக்கான குறுகிய கால கடன் வட்டி (ரெப்போ வட்டி) விகிதத்தை கால் சதவீதம் குறைத்தது.
இந்த ஆண்டில் கடந்த பிப்ரவரியில் இருந்து மொத்தம் வட்டி முக்கால் சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. தற்போது வட்டி 5.75 சதவீதமாக உள்ளது.
இதன் பலனை வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு அளிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி வலியுறுத்தி வந்தது.
இந்நிலையில், ரிசர்வ் வங்கி தொடர்ந்து அளிக்கும் வட்டி குறைப்பு சலுகைகளின்படி, வாடிக்கையாளர்களுக்கு பொதுத்துறை வங்கிகள் வட்டி குறைப்பு சலுகைகளை அளிக்கின்றனவா? என்பதை தெரிந்து கொள்ள இந்த கண்காணிப்பு நடவடிக்கையை மத்திய நிதி அமைச்சகம் மேற்கொள்ள இருக்கிறது.
ரிசர்வ் வங்கியின் கொள்கை முடிவின்படி, இதுவரையில் 18 பொதுத்துறை வங்கிகளில் 7 வங்கிகள்தான் வாடிக்கையாளர்களுக்கு வட்டி குறைப்பு சலுகை அளித்துள்ளன.
அலகாபாத் வங்கி, யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகியவை 0.05 சதவீதம் அளவுக்கு கடன்களுக்கான வட்டியை குறைத்துள்ளன.
இதேபோல், பாங்க் ஆப் மகாராஷ்டிராவும் குறைத்துள்ளது. ஆந்திரா வங்கி, கார்ப்பரேஷன் வங்கி, ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ் ஆகிய வங்கிகள் ஓராண்டுக்கான வட்டியை சிறிது குறைத்தன.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி, ரெப்போ வட்டியுடன் இணைந்த வீட்டு கடன் திட்டத்தை கடந்த ஜூன் மாதம் அறிமுகம் செய்தது. சில வங்கிகள் தங்களது கடனுக்கான வட்டி விகிதத்தை அதிகரித்தன.
இந்த சூழ்நிலையில் கண்காணிப்பு நடவடிக்கையை மத்திய நிதித்துறை அமைச்சகம் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.