டில்லி
அனைத்து வங்கிகளிலும் உள்ள 10 லட்சம் வங்கி ஊழியர் வரும் 22ஆம் தேதி வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதால் பணம் மற்றும் காசோலை பரிவர்த்தனைகள் கடும் பாதிப்பு அடையும் என தெரிய வருகிறது
தேசிய வங்கிகளை தனியார் மயமாக்குதல், வங்கிகளை இணைத்தல், வாராக்கடன்கள் தள்ளுபடி, ஜிஎஸ்டியால் அதிகமாக்கப்பட்டுள்ள சேவைக் கட்டணம் உட்பட 17 பிரச்சினைகளை உள்ளடக்கி 9 வங்கி ஊழியர் தொழிற்சங்கங்கள் வரும் ஆகஸ்ட் 22ஆம் தேதி அன்று வேலைநிறுத்தம் என அறிவித்துள்ளன. இதில் அதிகாரிகள் உட்பட சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்துக் கொள்வார்கள் என கூறப்படுகிறது.
இதனால் வங்கியில் செய்யப்படும் பண பரிவர்த்தனைகள், காசோலைகள் மாற்றுவது போன்றவை கடும் பாதிப்புக்கு உள்ளாகும் என தெரிய வருகிறது. ஆனால் இண்டர்நெட் பேங்கிங், ஏ டி எம் சேவைகள் போன்றவைகளுக்கு எந்த பாதிப்பும் இருக்காது. இந்த வேலை நிறுத்த அறிவிப்பு ஏற்கனவே வங்கிகள் கூட்டமைப்புக்கு அளிக்கப்பட்டு விட்டது என தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.
தொழிற்சங்கங்கள் இந்த வேலை நிறுத்தம் பற்றி, “வாராக்கடன் தள்ளுபடி பற்றி சரியான சட்டங்கள் எதுவும் இல்லை. இந்த தள்ளுபடிகள் அனத்துமே வங்கிகளின் வரவுச் செலவுக் கணக்கு அறிக்கைக்காக செய்யப்படுவது. இதனால் நஷ்டம் அடைவது வங்கிகளும், அதில் முதலீடு செய்துள்ள பொதுமக்களும் தான். உதாரணத்துக்கு, ஸ்டேட் பாங்க் சேவிங்க்ஸ் அக்கவுண்டுகளுக்கு வட்டியை குறைத்ததால் ரூ4400 கோடி லாபம் என கூறி, அதை வாராககடன் தள்ளுபடிக்குத்தான் உபயோகப் படுத்த உள்ளது. தவிர சேவை கட்டணங்கள் அதிகரிப்பு என்பது வங்கி வாடிக்கையாளர்களுக்கு மேலும் ஒரு சுமைதான். இவைகளை நீக்க இந்த வேலை நிறுத்தம் இன்றியமையாதது” என கூறி உள்ளன.