டில்லி

ங்கி எழுத்தர் தேர்வை வட்டார மொழிகளில் நடத்த நிதி அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.

வங்கியில் எழுத்தர் (கிளார்க்) பணிகளுக்கு எழுத்துத் தேர்வு, நேர்காணல் என்னும் வரிசையில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.    இந்த எழுத்துத் தேர்வுகள் இதுவரை ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் மட்டுமே நடத்தப்பட்டு வந்தன.  அந்தந்த மாநில வட்டார மொழிகளில் கல்வி பயின்றோருக்கு தேர்வு எழுத மிகவும் கடினமாக இருந்ததால் வட்டார மொழிகளில் எழுத வேண்டுகோள் விடப்பட்டது.

 நேற்று அதாவது செப்டம்பர் 30 அன்று மத்திய நிதி அமைச்சகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  அந்த அறிவிப்பில் இனி 12 பொதுத்துறை வங்கிகளுக்கான எழுத்தர் மற்றும் விளம்பரம் மூலம் நடைபெறும் அனைத்து பணிகளுக்கான எழுத்துத் தேர்வை இந்தியுடன்  வட்டார மொழிகளில் நடத்த வேண்டும் எனப் பரிந்துரை செய்துள்ளது.  அதன்படி இனி இந்த தேர்வுகள் இந்தி மற்றும் ஆங்கிலம் தவிர 13 மொழிகளில் நடைபெற உள்ளது.

மேலும் அந்த அறிவிப்பில், “பொதுத்துறை வங்கிகளில் எழுத்தர் பணிக்கான தேர்வுகளை வட்டார மொழிகளில் நடத்துவது குறித்து ஆராய இந்திய நிதி அமைச்சகம் ஒரு குழுவை உருவாக்கியது.  அந்த குழுவின் முடிவுப்படி இந்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.   இந்த முடிவுக்காக இதுவரை இந்திய வங்கி தேர்வு ஆணையத்தின் தேர்வுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.  அவை இனி நடைபெறும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனி வட்டார மொழிகளில் எழுத்தர் தேர்வுகளை நடத்த வேண்டும் என்னும் இந்த முடிவு எதிர்காலத்தில் காலியாகும் ஸ்டேட் வங்கி உள்ளிட்ட அனைத்து வங்கி பணி இடங்களுக்கும் பொருந்தும்.  தவிர ஏற்கனவே விளம்பரம் செய்யப்பட்டுள்ள பணியிடங்கள் மற்றும் இனி நடைபெற உள்ள அனைத்து தேர்வுகளையும் விண்ணப்பதாரர்கள்  வட்டார மொழிகளில் எழுத முடியும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.