பெங்களூரு:

பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா வங்கிகளிடம் வாங்கிய ரூ. 7 ஆயிரம் கோடிக்கும் மேற்பட்ட கடனை திருப்பி செலுத்தாமல் லண்டன் ஓடிவிட்டார்.

அவர் இந்தியாவில் இருந்தபோது ஒரு வங்கியில் அடகு வைத்திருந்த தனது மதுபான நிறுவன ஈவு பங்குகளை கோர்ட்டுக்கு அளித்திருந்த உத்தரவாதத்தை மீறி இங்கிலாந்து மதுபான நிறுவனத்துக்கு மாற்றி கொடுத்துள்ளார்.

அதனால் உறுதியளிப்பை மீறியதற்காக விஜய் மல்லையா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தலைமையிலான வங்கிகள் கூட்டமைப்பு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இவ்வழக்கில் விஜய் மல்லையா தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகாமல் டிமிக்கி கொடுத்து வருகிறார். இந்நிலையில் நீதிபதிகள் ஜெயந்த் பட்டேல், அரவிந்த் குமார் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

விஜய் மல்லையாவுக்கு எதிராக ஜாமீனில் வெளிவரமுடியாத கைது வாரண்ட் பிறப்பித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கு விசாரணையை பிப்ரவரி 17ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.