பெங்களூரு:

கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே உள்ள மகடி தாலுக்கா பள்ளியில் சுனந்தா (வயது 50) என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். 5ம் வகுப்பு மாணவர்களுக்கு சமூக அறிவியல் பாடத்தை நடத்திகொண்டிருந்தார்.

அப்போது மர்ம நபர் ஒருவர் திடீரென வகுப்பறைக்குள் அத்துமீறி நுழைந்து ஆசிரியர் சுனந்தாவிடம் பேசி கொண்டிருந்தார். அப்போது திடீரென இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்ப்பட்டது.

அந்த நபரை வகுப்பறையை விட்டு வெளியேறுமாறு ஆசிரியை கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த மர்ம நபர் தான் வைத்து இருந்த மண்ணெண்ணையை ஆசிரியை சுனந்தா மீது ஊற்றி விட்டு தீ வைத்துவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

இதை கண்டு மாணவர்கள் அதிர்ச்சி அடைந்து வகுப்பறையை விட்டு வெளியே ஓடி வந்தனர். தகவலிறிந்த சக ஆசிரியர்கள் ஆசிரியை சுனந்தாவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.

50 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தப்பிச் சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.