ஜோகன்னஸ்பர்க்: 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி, ஜூனியர் கிரிக்கெட் உலக கோப்பையை முதல்முறையாக கைப்பற்றியது வங்கதேசம்.
19 வயதுக்கு உட்பட்டோருக்கான 13வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. அரையிறுதியில் இந்தியா, பாகிஸ்தானை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது. வங்கதேசம், நியூசிலாந்தை சாய்த்து இறுதிக்குள் நுழைந்தது.
இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து இந்தியா பேட் செய்தது. போட்டியில் வங்கதேச அணி வீரர்கள் சிறப்பாக பந்துவீசினர்.
இந்திய அணி 25 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 80 ரன்கள் தான் எடுத்து இருந்தது. ஜெயிஸ்வால் 44 ரன்களும், திலக் வர்மா 28 ரன்களும் எடுத்திருந்தனர். அதன் பிறகு இந்திய அணிக்கு சரிவு தான். தொடர்ந்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
கடைசியில் 47.2 ஓவர்களில் 177 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்க தேசம் விளையாடியது. மிக சிறப்பான ஆட்டத்தை அவர்கள் வெளிப்படுத்தினர். 7 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் வங்க தேசம் எடுத்திருந்தது.
அப்போது மழையால் ஆட்டம் தடைபட்டது. இதையடுத்து, டக் வொர்த் லூவிஸ் முறை கணக்கிடப்பட்டது. அதன்படி வெற்றி இலக்கு 170 ஆக மாற்றி அமைக்கப்பட்டது. இந்த இலக்கை 42.1 வது ஓவரில் எட்டி 3 விக். வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி கோப்பையை வென்றது வங்கதேசம்.
இந்த வெற்றியின் மூலம் U 19 உலக கோப்பையை முதன்முறையாக கைப்பற்றி அசத்தி இருக்கிறது. வங்கதேச அணியின் இந்த வெற்றியை அந்நாட்டில் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
இந்தியா மற்றும் வங்கதேசம் ஆகிய இரு அணிகளும் ஏற்கனவே ஜூனியர் உலக கோப்பை போட்டியில் 4 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் 3ல் இந்தியாவும், ஒன்றில் வங்கதேசமும் வெற்றி பெற்றுள்ளன.