டாக்கா:  வங்கதேசத்தில் இடஒதுக்கீடு போராட்டம்,  மற்றும் ஊரடங்கு எதிராக போராட்டக்காரர்கள் நடத்திய வன்முறையில் இதுவரை  105 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலை யில், அங்கிருந்து இந்திய மாணவர்கள் வெளியேறுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதபாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இதுவரை 400 க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் வெளியேற்றப்பட்டு இருப்பதாகவும், அவர்கள்  அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும்  வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.

கடந்த 1971 ஆம் ஆண்டில் பாகிஸ்தானுக்கு எதிரான போரில் வெற்றி பெற்ற பின், வங்கதேசம் தனி நாடாக பிரிந்தது. இந்த போரில் உயிர் தியாகம் செய்தோர் குடும்பத்தைச் சேர்ந்த வாரிசுகளுக்கு அந்நாட்டு அரசு வேலையில் 30 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு வந்தது. கடந்த 2018-ல் நடந்த மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்து இந்த இடஒதுக்கீடு நிறுத்தி வைக்கப்பட்டது.

 இந்த நிலையில்,  பாகிஸ்தானுக்கு எதிரான போரில் உயிர் தியாகம் செய்தோரின் வாரிசுகளுக்கு 30% இடஒதுக்கீட்டை மீண்டும் அமல்படுத்த போவதாக பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான வங்கதேச அரசு சமீபத்தில் அறிவித்தது. இதை எதிர்த்து வங்கதேச மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். 

இந்த போராட்டத்தின் போது மாணவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே நடந்து வரும் மோதலில், இதுவரை 105 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவை வங்கதேசம் அரசு அறிவித்துள்ளது. சட்ட – ஒழுங்கை நிலைநாட்ட ராணுவப் படைகளை அனுப்பவும் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து, தலைநகர் டக்கா முழுவதும் காவல்துறை மற்றும் துணை ராணுவப் படைகளை அரசு குவித்துள்ளது.

இதனிடையே, வங்கதேசத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லுாரிகள் மற்றும் பல்கலைக்கழங்கள் மூடப்பட்டுள்ளன. மாணவர்கள், விடுதிகளை விட்டு வெளியேறும்படி உத்தரவிடப்பட்டது. அந்நாட்டில் பதற்றமான சூழல் நிலவுவதை அடுத்து, அங்கு படிக்கும் இந்திய மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் டாக்காவில் உள்ள இந்திய துாதரகம் செய்து வருகிறது.

8,500 மாணவர்கள் உட்பட சுமார் 15,000 இந்தியர்கள் அங்கு வசித்து வருவதாகவும், அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். 8,500 இந்திய மாணவர்களில், 405 பேர் இதுவரை வெளியேற்றப்பட்டுள்ளனர், மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா, இந்த விவகாரம் தொடர்பாக இந்திய தூதரகத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக கூறினார்.

தற்போது, கிடைக்கக்கூடிய வழிகளை பயன்படுத்தி, இந்திய மாணவர்கள் வீடு திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்திய மாணவர்கள் 300 பேரை தாயகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இணைய சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதால், மாணவர்கள் பெற்றோரை தொடர்பு கொண்டு பேசுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில் வங்கதேசத்தில் இருந்து  360 இந்தியர்கள், நேபாளர்கள் வங்கதேசத்தில் இருந்து மேகாலயாவிற்குள் வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தியா, நேபாளம் மற்றும் பூடான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மேலும் 360க்கும் மேற்பட்ட வன்முறையால் பாதிக்கப்பட்ட வங்கதேசத்திலிருந்து வெளியேறி மேகாலயாவிற்கு வந்துள்ளனர். அங்கு தஞ்சமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 670 ஆக உயர்ந்துள்ளதாக  பி.டி.ஐ- செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டு உள்ளது.

அதுபோல, டாவ்கி ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி வழியாக வெள்ளிக்கிழமை 363 பேர் மேகாலயாவை அடைந்தனர். அவர்களில் 204 பேர் இந்தியர்கள், 158 பேர் நேபாளர்கள் மற்றும் ஒருவர் பூட்டானைச் சேர்ந்தவர்கள் என்றும் பிடிஐ தெரிவித்து ள்ளது.

வங்கதேசத்தில் இருந்து திரும்புபவர்களுக்காக மேகாலயா அரசு அவசர உதவி எண் வழங்கியுள்ளது: 1800-345-3644