டாக்கா:
8,000 பயங்கரவாதிகளை வங்கதேசத்துக்குள் பாகிஸ்தான் அனுப்பியுள்ளதாக வங்கதேச தொழில்நுட்பத்துறை அமைச்சர் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார். இந்த பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவும் அபாயம் இருப்பதால், மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
இது தொடர்பாக வங்கதேச பிரதமரின் அரசியல் ஆலோசகர் ஹொசைன் இது குறித்து கூறுகையில், “ டாக்காவில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில், பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ., மற்றும் ஜமாத் அமைப்பிற்கு, உள்ள தொடர்பு பற்றி எங்களுக்கு நன்கு தெரியும்” என்றார்.
வங்கதேச தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் கூறுகையில்,” பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் உளவுத்துறையான ஐஎஸ்ஐ உதவி அளிக்கிறது. அவர்களுக்கு பயிற்சி அளித்து தேவையான ஆயுதங்களையும் வழங்குகிறது. பாகிஸ்தானிலிருந்து வங்கதேசத்திற்கு 8000 பயங்கரவாதிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” என்று திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.
பாகிஸ்தான் தூண்டுதலால் வங்கதேசத்தினுள் அனுப்பப்பட்டுள்ள பயங்கரவாதிகள், இந்தியாவுக்கும் குறிவைக்கக்கூடும் என்பதால், இந்திய ராணுவம் முன்னெச்சிரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவுவதை தடுக்க, இந்திய வங்கதேச எல்லையில், ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு படையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். மேற்கு வங்கத்தில் பதற்றமான 5 மாவட்டங்களில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.