டாக்கா

ங்க தேசத்தில் வசித்து வரும் இந்துக்கள் தங்கள் துர்கா பூஜை செலவை குறைத்துக் கொண்டு ரோஹிங்கியா அகதிகளுக்கு நிதி அளித்துள்ளனர்.

மியான்மர் நாட்டில் ஏற்பட்டுள்ள கலவரத்தினால் ரோஹிங்கியா இஸ்லாமியர்கள் சுமார் 4.20.000 பேர் வங்க தேசத்தில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர்.  இவர்களுக்கு சீக்கிய அமைப்பினர் உணவு உதவிகள் செய்து வருவது தெரிந்ததே.  இது தவிர சுமார் 800 இந்துக் குடும்பங்களும் கலவரத்தால் பாதிக்கப்பட்டு வங்க தேசத்தில் தஞ்சம் புகுந்துள்ளதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

வங்க தேச இந்துக்கள் நவராத்திரியை துர்கா பூஜை என்னும் பெயரில் விமரிசையாக கொண்டாடுவது வழக்கம்.  மேற்கு வங்க மாநிலத்தைப் போல இங்கும் பல துர்கா பூஜை கமிட்டிகள் உண்டு.  அந்த கமிட்டி அங்குள்ள இந்துக்களிடம் பணம் வசூலித்து துர்கா பூஜையை நடத்துவது வழக்கம்.

தற்போது இந்த துர்கா பூஜை கமிட்டிகளின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஒரு அறிக்கை விடுத்துள்ளார். அதில், “வங்க தேசத்தில் வாழும் இந்துக்கள் மியான்மரில் நடக்கும் கலவரங்களுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கின்றனர்.  லட்சக்கணக்கில் வங்க தேசத்துக்கு அகதிகள் வந்து குவிகின்றனர்.  அவர்களுக்கு உதவ இந்துக்கள் சமுதாயம் விரும்புகிறது.  அதன்படி துர்கா பூஜைகளுக்கான செலவுகளை மிகவும் குறைத்துக் கொண்டு அந்தப் பணத்தை அகதிகள் நிதிக்கு வழங்க தீர்மானம் செய்யப்பட்டுள்ளது.” என குறிப்பிடப் பட்டுள்ளது.

சமீபத்தில் ஐநா பொதுக்குழு கூட்டத்தில் உரையாற்றிய வங்க தேச பிரதமர் ஷேக் ஹசீனா மியான்மரில் அமைதி திரும்ப ஐ நா சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.  மேலும் ஐ நா சபை இந்த விவகாரத்தில் தலையிட்டு ரோஹிங்கியா இஸ்லாமியர்கள் பாதுகாப்பாக வசிக்க ஆவன செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஐ நா சபை ரோஹிங்கியா இஸ்லாமியர்கள் வாழ பாதுகாப்பான பகுதிகள் அமைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.