டாக்கா

ங்க தேச முன்னாள் அதிபரும் ராணுவ தலைவருமான ஹுசைன் முகமது எர்ஷாத் இன்று காலமானார்.

வங்க தேச ராணுவ தலைவரான ஹுசைன் முகமது எர்ஷாத் கடந்த 1982 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி ராணுவப் புரட்சியில் ஆட்சியை கைப்பற்றினார். அடுத்த வருடம் தம்மை அந்நாட்டின் ஜனாதிபதியாக அவரே அறிவித்துக் கொண்டார். அவரது ஆட்சியில் பல அரசியல் தலைவர்களை ஊழல் குற்றம் சாட்டி சிறையில் அடைந்தார்.

அத்துடன் அது வரை மதச்சார்பற்ற நாடாக இருந்த வங்க தேசத்தை இஸ்லாமிய நாடாக பிரகடனம் செய்தார்.

அவரை எதிர்த்து நாடெங்கும் போராட்டங்கள் நடந்தன. போராட்டத்தின் காரணமாக அவர் 1990 ஆம் வருடம் டிசம்பர் மாதம் பதவி விலக நேர்ந்தது. அவர் கடந்த 1985 ஆம் வருடம் வங்கதேச ஜாதிய கட்சி என ஒரு கட்சியை தொடங்கி இருந்தார். தற்போது 89 வயதாகும் எர்ஷாத் வயது மூப்பு காரணமாக நோய்வாய்ப்பட்டிருந்தார்.

கடந்த மூன்று வாரங்களாக கடுமையாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த எர்ஷாத் டாக்காவில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 10 தினங்களாக அவர் உயிர் செயற்கை முறையில் இயந்திரங்கள் மூலம் காப்பாற்றப்பட்டு வந்தது. இன்று காலை சிகிச்சை பலனின்றி எர்ஷாத் மரணம் அடைந்தார்.