டாக்கா: வங்கதேச கிரிக்கெட் அணியின் ஒட்டுமொத்த வீரர்களும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம், தாம் வைத்துள்ள கோரிக்கைகளை நிறைவேற்றித் தரும் வரையிலும போட்டிகளில் கலந்து கொள்ளப் போவதில்லையென உறுதியாகக் கூறி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வருகின்ற நவம்பர் 3லிருந்து துவங்கவிருந்த இந்திய-வங்கதேச டி20 மட்டுமின்றி, டெஸ்ட் தொடர்கள் அறிவிக்கப்பட்டிருந்த சமயத்தில் வங்கதேச வீரர்களின் இந்த அறிவிப்பு இருநாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அணியின் மூத்த வீரர்களும், உள்ளூர் வீரர்களும் சேர்ந்து 11 விதமான கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர். இந்நிலை வங்கதேச கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் மேற்கொண்ட, யாரும் எதிர்பார்க்காத அதிரடி நடவடிக்கைகளாலேயே ஏற்பட்டுள்ளது. பிரீமியர் லீக் போன்ற போட்டிகளை வாரியமே நடத்தி உள்ளூர் வீரர்களுக்குக் குறைந்த சம்பளம் தருவதும் போராட்டத்திற்கு முதன்மை காரணமாகும்.
ஆகவே, கோரிக்கைகளில் சில, தாகா பிழீமியர் லீக் தொடரில் சம்பள உச்சவரம்பு நீக்குதல், வங்கதேச பிரீமியர் லீக் தொடர்களில் வெளிநாட்டு வீரர்களுக்கு நிகரான சம்பளம் வழங்குதல் போன்றவை ஆகும். மேலும், உள்ளூர் அளவில் கிரிக்கெட்டை வளர்த்தெடுக்கத் தக்க திட்டங்களை வேண்டியும் கோரிக்கை வைத்துள்ளனர்.