டாக்கா: விண்டீஸ் அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில், 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது வங்கதேச அணி.
விண்டீஸ் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.
இந்நிலையில், முதல் போட்டி டாக்காவிலுள்ள மிர்பூர் ஸ்டேடியத்தில் துவங்கியது. டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச முடிவுசெய்தது.
இதன்படி களமிறங்கிய வீண்டீஸ் அணி மிக மோசமாக ஆடியது. அந்த அணியின் கைல் மேயர்ஸ் மட்டுமே சுமாராக ஆடி 40 ரன்களை சேர்த்தார். இறுதியில், 32.2 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 122 ரன்கள் மட்டுமே சேர்த்தது விண்டீஸ் அணி.
வங்கதேசம் சார்பில் ஷகீப் அல் ஹசன் 4 விக்கெட்டுகளையும், ஹசன் மக்முத் 3 விக்கெட்டுகளையும், எம்.ரஹ்மான் 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.
டி-20 போட்டிக்கான இலக்கை 50 ஓவர் போட்டியில் விரட்டிய வங்கதேச அணி, 33.5 ஓவர்கள் எடுத்துக்கொண்டே, 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றியை எட்டியது. அந்த அணியின் தமீம் இக்பால் அதிகபட்சமாக 44 ரன்களை அடித்தார்.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில், 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது வங்கதேச அணி.