பெங்களூரு
வெங்காய விலை உயர்வால் பெங்களூரு ஓட்டல்கள் வெங்காய தோசையை நிறுத்தி உள்ளன.
நாடெங்கும் பல நகரங்களில் வெங்காய விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. பல நகரங்களில் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை ரூ. 100 ஐ தாண்டி விட்டது. வட இந்தியாவில் ஒரு சில நகரங்களில் தற்போது ஒரு கிலோ வெங்காயம் ரூ.70 முதல் ரூ.80க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்தியச் சமையலில் வெங்காயம் அதிகம் இடம்பெற்றுள்ள நிலையில் மக்களுக்கு இந்த விலையேற்றம் துயரத்தை அளித்துள்ளது.
இதனால் பல இந்திய நகரங்களில் உள்ள இல்லங்கள் மட்டும் இன்றி உணவு விடுதிகளிலும் சமையலுக்கு வெங்காயம் பயன்படுத்த இயலாத நிலை உள்ளது. கர்நாடகாவில் புகழ்பெற்ற உணவுகளில் வெங்காய தோசையும் ஒன்றாகும். தென் இந்தியர்கள் மட்டுமின்றி வட இந்தியர்களும் வெங்காய தோசை பிரியர்களாக உள்ளனர்.
அவர்களுக்கு ஒரு அதிர்ச்சி தரும் செய்தியாகப் பெங்களூரு நகரில் பல உணவு விடுதிகளில் வெங்காய தோசையை நிறுத்தி உள்ளனர். அந்த விடுதிகளில் உணவுப்பட்டியலில் இருந்து வெங்காய தோசை நீக்கப்பட்டுள்ளது. இது உணவு விடுதி பயன்பாட்டாளர்களுக்கு மிகவும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
பெங்களூரு உணவு விடுதி உரிமையாளர் சங்க பொருளாளர் காமத், “நாங்கள் பல உணவு விடுதிகளில் வெங்காய தோசையை முழுவதுமாக நிறுத்தி விட்டோம். வெங்காய விலை உயர்வு காரணமாகப் பெரிய விடுதிகளில் விலை உயர்த்தினால் அவர்கள் பொறுத்துக் கொள்வார்கள்.
ஆனால் சிறிய மற்றும் நடுத்தர உணவு விடுதிகளில் அது நடக்காத ஒன்றாகும். ஆகவே அனைத்து உணவு விடுதிகளிலும் வெங்காய தோசை நிறுத்தப்பட்டுள்ளது ஒரு சில உணவு வகைகளில் வெங்காயம் பயன்படுத்துவது அவசியமாக உள்ளது. அங்குக் குறைந்த அளவில் வெங்காயத்தை பயன்படுத்துகிறோம்.” எனத் தெரிவித்துள்ளார்.