அபுதாபி: ராஜஸ்தான் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது கோலியின் பெங்களூரு அணி.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணியில், கடந்தமுறை போலவே நல்ல துவக்கம் கிடைக்கவில்லை. அந்த அணியின் முக்கிய நம்பிக்கை நட்சத்திரங்களான ஸ்மித் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் முறையே 5 மற்றும் 4 ரன்களில் நடையைக் கட்டினர்.
ஜோஸ் பட்லர் 12 பந்துகளில் 22 ரன்கள் மட்டுமே அடித்தார். மற்றொரு எதிர்பார்ப்பு ராகுல் டெவாஷியா எடுத்தது 24 ரன்கள் மட்டுமே. மஹிபால் லோம்ரார் 39 பந்துகளில் 47 ரன்களை அடித்தார்.
இறுதியில், 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது ராஜஸ்தான் அணியால்.
பின்னர், சற்று எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய பெங்களூரு அணியில், துவக்க வீரர் தேவிதத் படிக்கல் 45 பந்துகளில் 63 ரன்களை விளாசினார். இதற்கு முந்தையப் போட்டிகளில் ஜொலிக்காத கேப்டன் விராத் கோலி, இந்தப் போட்டியில் எழுச்சி கண்டு 53 பந்துகளில் 72 ரன்களை குவித்து வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.
மொத்தம் 19.1 ஓவர்களிலேயே, 2 விக்கெட் மட்டுமே இழந்து 158 ரன்களை எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் பெரிய வெற்றியை அடைந்தது பெங்களூரு அணி.