இளம்பெண்ணை காதலிப்பதாகக் கூறி உல்லாசமாக இருந்த வாலிபர் ஆபாச படங்களை வெளியிடுவதாக மிரட்டி ரூ. 2.57 கோடி பறித்ததாக பெங்களூரு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபரின் 20 வயது மகள் அளித்த இந்த புகாரின் பேரில் மோகன் குமார் (21) என்பவரை இரண்டு நாட்களுக்கு முன் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்த விசாரணையில், 2017 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில், தேவனஹள்ளியில் உள்ள தனியார் உண்டு உறைவிட பள்ளியில் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் போது, மோகன் குமாருடன் அந்த இளம்பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டதாகவும்.

அது நாளடைவில் நட்பாக மாறி கோவா சென்று இருவரும் தனிமையை அனுபவிக்கும் வகையில் வளர்ந்ததும் தெரியவந்தது.

இவர்கள் இருவரும் தனிமையில் இருந்த அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை மோகன் குமார் தனது மொபைலில் படம்பிடித்துள்ளார்.

இதில் பலவற்றில் தனது முகம் தெரியாமல் இருப்பதை உறுதி செய்த மோகன் குமார், நாளடைவில் இந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை அந்த பெண்ணிடம் காட்டி அதை வெளியிடுவதாகக் கூறி மிரட்ட தொடங்கியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண் மோகன் குமார் கேட்டதை எல்லாம் வாங்கி தந்திருக்கிறார், விலை உயர்ந்த கடிகாரங்கள், தங்க நகைகள், சொகுசு கார் என உல்லாசம் அனுபவித்த மோகன் குமாரின் ஆசைக்கு அளவே இல்லாமல் சென்றது.

ஏற்கனவே தனது பாட்டிக்கு தெரியாமல் அவரை ஏமாற்றி அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ. 1.25 கோடியை ரகசியமாக எடுத்த அந்த இளம்பெண் அதை மோகன் குமார் கூறிய வங்கி கணக்கில் செலுத்தியுள்ளார்.

இருந்தபோதும் மோகன் குமாரின் தொல்லை அத்துமீறி சென்றதை அடுத்து தனது பெற்றோரிடம் விவரத்தை கூறிய அந்த இளம்பெண் காவல்துறையில் புகார் அளித்தார்.

இந்த விசாரணையில் மோகன் குமார் தவறு செய்தது உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 100 கிராம் தங்க நகைகள், இரண்டு விலையுயர்ந்த பைக்குகள் உள்ளிட்ட சுமார் 80 லட்ச ரூபாயை மீட்டுள்ளனர்.