பெங்களூரு: தனது விண்ணப்பம் 11 முறை நிராகரிக்கப்பட்ட நிலையிலும், தொடர்ந்து போராடி, தனக்கான வாக்காளர் அடையாள அட்டையைப் பெற்றுள்ளார் பெங்களூரு திருநங்கையான 22 வயது ரியன்னா.
இதுகுறித்து அவர் கூறியதாவது, “எனக்கு 18 வயது நிரம்பியவுடன், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னதாக, வாக்காளர் அடையாள அட்டைப் பெறுவதற்காக விண்ணப்பித்தேன். ஆனால், எனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
இருப்பினும், திரும்ப திரும்ப விண்ணப்பித்தேன். பாலினக் குழப்பத்தால் மொத்தம் 11 முறை எனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. தற்போது, ஒருவழியாக எனது உரிமையைப் பெற்றுவிட்டேன்.
இந்தியக் குடிமகனாக இருந்தாலும், இதற்காக இவ்வளவு பேராட வேண்டியிருந்தது. எனது பாலினத்தைச் சேர்ந்த பலரைப் போல, நானும் இந்த தேர்தலில் முதன்முதலாக வாக்களிக்க உள்ளேன் என்பதை நினைக்கையில், மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது” என்றார்.
இவர், பெங்களூரு மத்திய தொகுதியில் வாக்களிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2009ம் ஆண்டுதான், திருநங்கைகள் முதன்முதலாக வாக்களிக்க அனுமதிக்கப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
– மதுரை மாயாண்டி