பெங்களூருவைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர் அதுல் சுபாஷ் தற்கொலை தொடர்பான விவாதம் நடைபெற்று வரும் நிலையில், மற்றொரு வழக்கில் ஜீவனாம்சத் தொகையை தீர்மானிக்க உச்ச நீதிமன்றம் எட்டு அம்ச காரணிகளை வகுத்துள்ளது.
இந்தியாவில் ஆண்களுக்கு சட்டப்பாதுகாப்பு இல்லை என்றும் தன்னை பிரிந்து வாழும் மனைவி நிகிதா சிங்கானியா மற்றும் அவரது குடும்பத்தினர் மிரட்டி பணம் பறிப்பதாகவும் துன்புறுத்துவதாகவும் குற்றம்சாட்டியுள்ள அதுல் சுபாஷ் எழுதிய 24 பக்க தற்கொலை கடிதம் மற்றும் தற்கொலைக்கு முன் அவர் வெளியிட்ட வீடியோ நேற்று நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
பணத்திற்காக மனைவி மற்றும் மாமியார் துன்புறுத்தியதால் பெங்களூரைச் சேர்ந்த மென்பொறியாளர் சுபாஷ் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் பிரசன்னா பி வரலே அடங்கிய உச்ச நீதிமன்ற பெஞ்ச், இந்து தம்பதிகள் சம்பந்தப்பட்ட விவாகரத்து வழக்கில் இறுதி ஜீவனாம்சத் தொகையை தீர்மானிப்பதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
திருமணமாகி ஆறு ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த நிலையில் சுமார் 20 ஆண்டுகளாக பிரிந்து வாழும் தம்பதி தொடர்ந்த வழக்கில் இந்த வழிகாட்டுதல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
•வழக்கு தொடர்பவர்களின் சமூக மற்றும் நிதி அந்தஸ்து
•மனைவி மற்றும் சார்ந்திருக்கும் குழந்தைகளின் நியாயமான தேவைகள்.
•வாதி பிரதிவாதியின் தனிப்பட்ட தகுதிகள் மற்றும் வேலை நிலைகள்.
•விண்ணப்பதாரருக்குச் சொந்தமான சுயாதீன வருமானம் அல்லது சொத்துக்கள்.
•திருமண வீட்டில் மனைவி அனுபவிக்கும் வாழ்க்கைத் தரம்.
•குடும்பப் பொறுப்புகளுக்காக ஏதாவது வேலையை தியாகம் செய்தது
•வேலை செய்யாத மனைவிக்கு நியாயமான வழக்குச் செலவுகள்.
•கணவரின் நிதித் திறன், அவரது வருமானம், பராமரிப்புக் கடமைகள் மற்றும் பொறுப்புகள்.
நிரந்தர ஜீவனாம்சத் தொகையைத் தீர்மானிப்பதற்கான வழிகாட்டுதளாக மற்ற அனைத்து நீதிமன்றங்களும் இதனைப் பின்பற்றுமாறு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், மேற்கூறிய காரணிகளை “சூத்திரமாக கொண்டு செயல்படாமல் நிரந்தர ஜீவனாம்சத்தை தீர்மானிக்கும் போது ஒரு வழிகாட்டியாக” ஏற்று செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.