சென்னை:

டிடிவி கட்சியில் இருந்து அடுத்து பெங்களூர் புகழேந்தி வெளியேறுவார் என்று தகவல்கள் பரவி வருகின்றன. இதை உறுதிப்படுத்தும் வகையில், டிடிவி தினகரனின் வலது கரமாக திகழும் வெற்றிவேல் கருத்து தெரிவித்து உள்ளார்.

டிடிவி தினகரனின் தீவிர ஆதரவாளர்களாக வலம் வந்த செந்தில்பாலாஜி, தங்கத்தமிழ்ச்செல்வன் போன்றோர், அங்கிருந்து விலகி மாற்றுக்கட்சியில் அடைக்கலம் தேடிய நிலையில், மற்றொரு முக்கிய நிர்வாகியான பெங்களூர் புகழேந்தியும் டிடிவி தினகரன் மீது கொண்ட அதிருப்தி காரணமாக  அங்கிருந்து விலகி திமுகவில் ஐக்கியமாக உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.

டிடிவி குறித்து  புகழேந்தி பேசும் வீடியோ ஒன்று வெளியாகி சலசலப்பை ஏற்படுத்திது. வருகிறது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அமமுக செய்தித்தொடர்பாளர் வெற்றிவேல்.  புகழேந்தியின் பேச்சு வேறு கட்சிக்குச் செல்லும் மனநிலையை காட்டுவதாக கூறி உள்ளார்.

சமீபத்தில் புகழேந்தி பேசியதாக வீடியோ ஒன்று வெளியாகி வைரலானது. அதில், ‘முகவரி இல்லாமல் 14 வருடங்கள் டிடிவி வெளியே இருந்ததாகவும், அவரை  ஊருக்குக் காண்பித்தது புகழேந்திதான். உண்மையைச் சொல்ல வேண்டும் எனில் ஜெயலலிதா இறக்கும்போது கூட டிடிவி தினகரன் கிடையாது. நாம்தான்  அவரை வெளியே காண்பித்தோம்” என்று பேசுவதாக உள்ளது.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதால், அமமுக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த புகழேந்தி,  ”கோவையில் நான் கட்சியினருடன் பேசியது உண்மை.  கட்சிமீது  அதிருப்தியில் இருந்தவர்களைச் சமாதானப்படுத்தவே அப்படிப் பேசினேன் என்று கூறியிருந்தார்.எங்களுடைய ஐடி பிரிவில் இருந்தே வீடியோ வருவது நன்றாக இருக்கிறதா? இது நியாயமா? மேலும், என்னை அசிங்கப்படுத்தவே வீடியோ வெளியிடப்பட் டிருக்கிறது” என்று கண்டனம் தெரிவித்திருந்தார்.

இநத் நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய வெற்றிவேல்,  ”டிடிவி தினகரனை அறிமுகப்படுத்தி யதே நான்தான் என்று புகழேந்தி சொல்வது தவறான கருத்து. அவர் நிர்வாகிகளுடன் பேசியதுதான் வைரலாகியுள்ளது என்று கூறியவர், அந்த வீடியோவை அமமுகவின் ஐடி பிரிவுதான் வெளியிட்டது என்று எப்படிக் கூறமுடியும்? என்று எதிர்க்கேள்வி எழுப்பினார்.

எல்லாக் கட்சிகளிலும்  சில பிரச்சினைகள் இருந்துகொண்டுதான் இருக்கும். அப்படி இருக்கும் போது பிரச்சினையை டிடிவி தினகரனிடம் எடுத்துச் செல்லாமல் இவராகப் பேசியது ஏன்? என்று கூறியவர், டிடிவி தினகரன்  புகழேந்தியால்தான் அறிமுகப்படுத்தப்பட்டார் என்பது எந்த வகையில் நியாயம்?  என்று கேள்வி எழுப்பினார்.

கர்நாடகாவில் இருந்த புகழேந்திக்கு, இங்கு வந்து பேசிய பிறகுதான் மரியாதை கிடைத்தது என்பதை  மறந்துவிடக் கூடாது என்று எச்சரித்த வெற்றிவேல்,  பிரச்சினைகள் இருந்தால் பேசித் தீர்க்க வேண்டியதுதானே?  இவர், தலைமையிடம் பேசியிருக்க வேண்டும். அதைவிடுத்துத் தொண்டர்களிடமும் நிர்வாகிகளிடமும் பேசியது ஏன்?

புகழேந்தி பேசியதைப் பார்த்தால் வேறு கட்சிக்குச் செல்வது போலத்தான் உள்ளது” என்று வெற்றிவேல் தெரிவித்துள்ளார்.