பெங்களூர்:
பெங்களூர்- மைசூரு இடையே 118 கிலோ மீட்டர் தொலைவிற்கு அமைக்கப்பட்டுள்ள 10 வழிச்சாலையை இன்று பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
கர்நாடகாவில் இப்போதே தேர்தல் களம் அனல் பறக்க தொடங்கிவிட்டது. இந்த நிலையில், கர்நாடகாவில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று கர்நாடக மாநிலம் வருகை தருகிறார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் பெங்களுருக்கு காலை 11.35 மணியளவில் பிரதமர் மோடி வருகை தருகிறார்.
இதன் பின்னர் ஹெலிகாப்டர் மூலம் மண்டியா மாவட்டம் வரும் பிரதமர் மோடி, அங்குள்ள ஐபி சர்க்கிள் பகுதியில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரோட்ஷோவாக செல்கிறார். பின்னர் விரைவுச்சாலையை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் பிரதமர் மோடி, விரைவுச்சாலையில் 50 மீட்டர் தூரம் நடந்து சென்று பார்வையிட உள்ளார். மேலும் ரூ.16 ஆயிரம் கோடி மதிப்பிலான வளர்ச்சி பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.