புதுடில்லி: 21 இந்திய தலைநகரங்களில் குழாய் நீரின் தரம் குறித்த சமீபத்திய ஆய்வில், அந்த நகரங்களில் பெரும்பாலானவற்றில் கிடைக்கும் குழாய் நீரை உட்கொள்ள முடியாது என்று கண்டறியப்பட்டுள்ளது.
21 மாநில தலைநகரங்களில், மும்பையில் இருந்து எடுக்கப்பட்ட குழாய் நீர் மாதிரிகள் மட்டுமே குடி நீருக்கான தர நிர்ணயங்களை நிறைவேற்றியதாக ஆய்வின்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் குழாய் குடிநீரின் தரம் குறித்த அறிக்கையை மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் 16ம் தேதியன்று வெளியிட்டார்.
முதல் இரண்டு கட்டங்களில், இந்திய தரநிலைகள் பணியகம் (பிஐஎஸ்) நிர்ணயித்த தேசிய தரங்களுக்கு ஏற்ப குழாய்களில் உள்ள நீரின் தரம் உள்ளதா என்பதை அறிய நாடு முழுவதும் 21 நகரங்களில் இருந்து மாதிரிகள் ஆய்வுக்கு எடுக்கப்பட்டன. பிரதமர் நரேந்திர மோடியின் ஜல் ஜீவன் மிஷனின் நோக்கங்களை கருத்தில் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.
ஆய்வின் படி, தரங்களை கடைபிடிக்கும் மாதிரிகள் இருந்த ஒரே நகரம் மும்பை மட்டுமே. மும்பையிலிருந்து 10 மாதிரிகளை அமைச்சகம் எடுத்திருந்தது. சண்டிகர், திருவனந்தபுரம், பாட்னா, போபால், குவஹாத்தி, பெங்களூரு, காந்தி நகர், லக்னோ, ஜம்மு, ஜெய்ப்பூர், டெஹ்ராடூன், சென்னை மற்றும் கொல்கத்தா ஆகியவை ஆய்வுக்கு நீர் மாதிரிகள் பெறப்பட்ட மற்ற நகரங்களாகும்.
“டெல்லியில் 11 இடங்களில் இருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டன. ஆனால், அவை அனைத்துமே தோல்வியடைந்தன, ஆனால் மும்பையின் அனைத்து மாதிரிகளும் தெளிவாக உள்ளன. மும்பையின் குழாய் நீர் குடிக்கக்கூடியது”, என்று அமைச்சர் கூறினார். குழாய் நீரைக் குடிக்க வைக்க தனது அரசாங்கம் என்ன உதவியை செய்ய முடியும் என்பதைத் தெளிவுபடுத்துமாறு கேட்டு மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் அவர் கூறினார்.