சென்னை: சென்னையில் கழிவு நீர் அடைப்பை எடுக்க நவீன ‘பண்டிகூட்’ இயந்திரம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த இயந்திரம் மூலம் சோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது.
சென்னை மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்கான அடிப்படை வசதிகள் இன்னும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. இதற்கிடையில் அதிகரித்து வரும் கட்டுமானங்கள் மற்றும் மக்கள் பெருக்கத்தால், கழிவுநீர் பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. தற்போதைய நிலையில், செ5ன்னை மாநகரப் பகுதி 426 சதுர கிமீ பரப்பில் விரிவடைந்துள்ளது. சுமார் 85 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். தினமும் சுமார் 15 லட்சம்பேர் வந்து செல்கின்றனர். மக்கள்தேவைக்காக சென்னை குடிநீர் வாரியம் சார்பில் தினமும் 1072 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. மேலும் கேன் குடிநீர்மூலம் தினமும் 200 மில்லியன்லிட்டருக்கு மேல் பயன்படுத்தப் பட்டு வருகிறது. இவ்வாறு பயன்படுத்தப்படும் நீர், சுமார் 1000 மில்லியன் லிட்டருக்கு மேல் கழிவுநீராக தினமும் வெளியேற்றப்படுகிறது.
தற்போதைய நிலையில், சென்னை குடிநீர் வாரியத்திடம் கழிவுநீரை வெளியேற்ற, வீடுகள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு 9 லட்சத்து 30 ஆயிரம் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றின் வழியாக வரும் கழிவுநீரை 302 கழிவுநீரேற்றும் நிலையங்கள் மூலமாக 13 சுத்திகரிப்பு நிலையங்களுக்கு கொண்டுசெல்லப்படுகிறது. அவற்றில் தினந்தோறும் சுமார் 745 மில்லியன் லிட்டர் கழிவுநீர் சுத்திகரிக்கப்படுகிறது. இந்த கழிவுநீர் சேவைக்காக சென்னை குடிநீர் வாரியம் 4 ஆயிரம்கிமீ-க்கு நீளத்துக்கு மேல் கழிவுநீர்குழாய் கட்டமைப்புகளை கொண்டுள்ளது. இந்த குழாய்கள் பழுது மற்றும் சாலையோர பணிகள் காரணமாக குழாய்கள் சேதம், பொதுமக்களின் பொறுப்பற்ற செயல்கள் போன்றவைகளால் சரியான முறையில் கழிநீர் வெளியேற முடியாத சூழல் உள்ளது.
இதுபோன்ற பிரச்சினைகளை கழிவுநீர் ஊர்தி மூலம் குடிநீர் வழங்கல்துறை சரி சய்து வருகிறது. சில இடங்களில் பணியாட்கள் களத்தில் இறங்கி, அடைப்புகளை சரி செய்யும் அவலங்கள் நடந்தேறி வருகின்றன. இதுபோன்ற சம்பவங்களில் பலர் விஷவாயு தாக்கி இறந்து போகும் சோகமான சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.
இதற்கு கடும் கண்டனங்களும், நீதிமன்ற எச்சரிக்கைகளும் எழுந்துள்ளதால், கழிவுநீர் அடைப்புகளை நீக்க தற்போது இயந்திர ஆட்டோக்களில் பொருத்தப்பட்டுள்ள இயந்திரங்கடள் மூலமாக அடைப்புகள் நீக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தற்போது, ஓஎன்ஜிசி நிர்வாகம், பெருநிறுவன சமூக பொறுப்புநிதியில் 3 நவீன அடைப்பு நீக்கும் ‘பண்டிகூட் (Bandicoot)’ இயந்திரங்களை சென்னை குடிநீர் வாரியத்துக்கு வழங்கியுள்ளது. இதை வைத்து சோதனை முறையில் கழிவுநீர் அடைப்புகள் நீக்கப்பட்டு வருகின்றன.
இது தொடர்பாக கூறிய குடிநீர் மற்றும் கழிவுநீர் துறை அதிகாரிகள், அடைப்பு நீக்கும் ‘பண்டிகூட் (Bandicoot)’ இயந்திரங்கள் 3 வந்துள்ளது. இதனை சோதனை முறையில் உபயோகப்படுத்த திரு.வி.க.நகர், தேனாம்பேட்டை, அடையாறு ஆகிய 3 மண்டலங்களுக்களுக்கு தலா 1 இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த இயந்திரத்தை கொண்டு, இயந்திர நுழைவு வாயில்களில் அடைப்பு நீக்குதல், தூர் வாருதல் போன்ற பணிகளை எளிதாக செய்ய முடியும். அதில் சென்சார் கேமராக்கள், விஷவாயு கசிவை கண்டறியும் சென்சார்கள் போன்ற சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இதன்மூலம் அடைப்பு நீக்கும் பணி எளிதாகும். மேலும், விஷ வாயு தாக்கி பணியாளர்கள் மரணிப்பதை தடுக்க முடியும். மனித உழைப்பும் குறையும். எரிபொருளும் மிச்சமாகும் என்றனர். இந்த இயந்திரத்தின் பயன்பாடு திருப்தியாக இருக்கும் பட்சத்தில் பிற மண்டலங்களில் விரிவாக்குவது குறித்து வாரிய தலைமை முடிவெடுக்கும் என்று தெரிவித்துள்ளனர்