சென்னை: 75 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களின் தேவைகளுக்கு உதவ சென்னை பெருநகர காவல் துறையின் பந்தம் சேவை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கான உதவி கோர, உதவி செல்போன் எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது.
75வயதுக்கு மேற்பட்ட முதியோர்களின் அவசர உதவிக்காக, சென்னை காவல்துறை புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. பொதுவாக வீடுகளில் வசிக்கும் 75 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களும் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். சில சமயங்களில் வீட்டில் தனியாக இருப்பதால், அவசர தேவையின்றி தவிக்கின்றனர். மேலும், உற்றார், உறவினர்கள் இல்லாத 75 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் தங்களுக்கு தேவையான மருந்துகள், சட்ட உதவிகள் போன்றவற்றை பெற அல்லப்படுகின்றனர். இதுபோன்றவர்களுக்கு சேவை அளிக்க பந்தம் என்ற பெயரில் சென்னை காவல்துறையில் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
னவே 75 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் 94999-57575 என்ற செல்போன் எண்ணை தொடர்பு கொண்டால் அவர்களுக்கு தேவையான உதவிகளை காவல் துறையினர் மூலம் செய்து கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து சென்னை பெருநகர காவல் துறையின் மூலம் சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்டு மூத்த குடிமக்கள், பொதுமக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
ஏற்கனவே சென்னையில் ஆதரவற்ற நிலையில் சாலையோரம் வசிப்போர் மற்றும் முதியோர்களின் நலன் காக்கும் பொருட்டு சென்னை காவல்துறை சார்பில் காவல் கரங்கள் என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டது. அதன்படி சாலையோரங்களில் ஆதரவின்றி இருக்கும் நபர்கள் மற்றும் முதியோர்களை மீட்டு அவர்களுக்கு மருத்துவ உதவிகள் அளித்து, உண்ண உணவும், இருப்பிடமும் இல்லாமல் இருப்பவர்களை காப்பகங்களில் சேர்க்க தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து காவல்துறை இத் திட்டத்தைச் செயல்படுத்துகிறது.
மேலும் சாலைகளில் உள்ள ஆதரவற்ற முதியோர், பெண்கள் மற்றும் சிறுவர்கள் குறித்து சென்னை பெருநகர காவலில் இயங்கி வரும் முதியோர் உதவி மைய எண் 1253, பெண்கள் உதவி மைய எண் 1091, சிறுவர் உதவி மைய எண் 1098 மற்றும் காவல் கட்டுப்பாட்டு அறை எண் 100 ஆகியவற்றில் வரும் தகவல்கள் காவல் உதவி மையம் மூலம் பெறப்பட்டு ரோந்து வாகனத்திற்கு தகவல் கொடுக்கப்படும். மேலும், கண்டறியப்பட்ட இடத்திற்குச் சென்று அவர்களுக்கு உதவிடவும், உறவுகளால் கைவிடப்பட்ட நபர்களை அவர்களது உறவினர்களிடம் சேர்க்கவும், ஏற்பாடு செய்யப்படுகிறது.
இந்நிலையில் மேலும் புதிய முயற்சியாக 75 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் வீட்டில் தனியாக இருப்பதால் அவர்களின் தேவைகளுக்கு உதவிடும் வகையில் சென்னை பெருநகர காவல் துறையின் ‘‘பந்தம் சேவை” என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.