சென்னை:
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் வரும் 22ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என்று பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில், தமிழகத்தில், வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள், கடைகள் அனைத்தும் மூடப்படும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் விக்கிரமராஜா அறிவித்து உள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில், வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்தும் வகையில், நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி நேற்று இரவு உரையாற்றினார். அப்போதுஇ உலகம் மிகப்பெரிய அச்சுறுத்தலை சந்தித்து வருகிறது. கொரோனா வைரஸ் உலகப்போர் போல தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு இந்தியரும் இந்த ஆபத்தான சூழலில் விழிப்புடன் இருக்க வேண்டும்.
இனிமேல் வரும் வாரங்களில், அரசுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். கொரோனா வைரஸ் தாக்கத்தின் எதிர்ப்பில் மெத்தனமாக இருக்கக்கூடாது. கொரோனா வைரஸை தடுக்க உறுதி மற்றும் கட்டுப்பாடு மிக முக்கியமான தேவை. மக்கள் கூடுவதை தவிர்த்து முடிந்த அளவிற்கு தங்களை தனிமைப்படுத்திக்கொள்வது முக்கியம்.
வரும் 22-ஆம் தேதி அன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை அத்தியாவசிய சேவைகளில் பணிபுரிவோர் தவிர, மற்ற யாரும் வெளியில் வர வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார்.
இதற்கு மக்களிடையே ஒருபுறம் வரவேற்பு உள்ள நிலையில், மற்றொருபுறம் கடும் விமர்சனங்களும் எழுந்து வருகிறது.
ஆனால், தமிழகத்தை பொறுத்தவரை மோடியின் அறிவிப்புக்கு சாதகமாகவே பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. ஏற்கனவே மாநில அரசே மக்கள் கூடும் அனைத்து இடங்களையும் மூடிவிட்ட நிலையில், பிரபல கடைகளையும் மூட உத்தரவிட்டு உள்ளது.
இந்த நிலையில், தற்போது, பிரதமர் மோடியின் சுய ஊரடங்கு கோரிக்கையை ஏற்று வரும் 22-ஆம் தேதி தமிழகம் முழுவதும் கடைகள், ஓட்டல்கள் உள்பட அனைத்து வணிக நிறுவனங்களும் அடைக்கப்படும் என வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.
வணிகர்களும் கடைகளை அடைக்க முடிவெடுத்துள்ளதான் அன்றைய தினம் முழு அடைப்பு போலவே காணப்படும் நிலை உருவாகி உள்ளது.
மேலும் தனியார் ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்கள், தனியார் பேருந்துகள் மற்றும் , மாநில அரசு பஸ்களை இயக்குமா அல்லது அதுவும் தவிர்க்கப்படுமா என்பது இன்னும் தெரியவில்லை…