பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்ட மருத்துவமுறைகளை இழிவு படுத்தும் வகையில் தொடர்ந்து விளம்பரங்களை வெளியிட்டு வருவதாக இந்திய மருத்துவக் கழகம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
ஏற்கனவே இதேபோன்ற வழக்கில் இனி இதுபோன்ற விளம்பரங்களை வெளியிடக்கூடாது என்று நீதிமன்றம் கண்டித்த நிலையில் மீறினால் 1 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்திருந்தது.
இருந்தபோதும் பதஞ்சலி நிறுவனம் தனது அவதூறு விளம்பரங்களை நிறுத்தாததை அடுத்து இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் மீண்டும் புகார் அளிக்கப்பட்டது.
இந்த மனு நீதிபதிகள் ஹிமா கோலி மற்றும் அஹ்சானுதீன் அமானுல்லா அடங்கிய பெஞ்ச் முன் இன்று விசாரணைக்கு வந்தது.
இதுபோன்ற விளம்பரங்களை வெளியிடுவதில்லை என்று நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உறுதியளித்த போதிலும் மருத்துவ சிகிச்சைகள் தொடர்பாக தவறான விளம்பரங்களை தொடர்ந்து வெளியிட்டதற்காக பதஞ்சலி நிறுவனத்தை கடுமையாகக் கண்டித்தனர்.
நிறுவனம் உறுதிமொழியை மீறியதை முதன்மையான பார்வையில் கவனித்த நீதிமன்றம், பதஞ்சலி ஆயுர்வேத் மற்றும் ஆச்சார்யா பாலகிருஷ்ணா (பதஞ்சலியின் நிர்வாக இயக்குநர்) ஆகியோருக்கு நீதிமன்ற அவமதிப்புக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று நோட்டீஸ் அனுப்பியது.
மேலும், மருந்துகள் மற்றும் மந்திர சிகிச்சைகள் (ஆட்சேபனைக்குரிய விளம்பரங்கள்) 1954 சட்டப்படி பதஞ்சலி ஆயுர்வேத் தயாரிப்புகளை விளம்பரப்படுத்த தடை விதித்து தீர்பளித்துள்ளனர்.