‘4-PM’ என்ற யூடியூப் சேனலுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரிய மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரம் குறித்து மத்திய அரசின் கருத்தைக் கோரியது.
பஹல்காம் தாக்குதலை அடுத்து அங்கு சென்ற அமித் ஷா சிவப்பு கம்பளத்தில் நடந்து சென்றார் என்று தலைப்பிட்ட வீடியோவை பதிவிட்ட அந்த சேனல் “அவர் அங்கு சென்றது பாதிக்கப்பட்டவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கவா அல்லது ஒரு நிகழ்ச்சியை நடத்தவா ?” என்று கேள்வி எழுப்பி இருந்தது.

தவிர மற்றொரு வீடியோ பதிவில், “பிரதமர் மோடி சிந்து நதி நீர் ஒப்பந்தம் குறித்து தவறாகப் பேசி வருகிறார், ஆனால் உண்மை என்னவென்றால் பாகிஸ்தானுக்கு தண்ணீர் குறைவாக இல்லை, அதிகமாகவே கிடைக்கிறது” என்று குற்றம்சாட்டியிருந்தார்.
இதையடுத்து, இந்திய அரசின் வேண்டுகோளின் பேரில் அந்த யூடியூப் சேனல் தடை செய்யப்பட்டது.
இது “மக்களையும் பத்திரிகையாளர்களையும் நசுக்கும் செயல்” என்று அந்த சேனலின் தலைமை ஆசிரியர் சஞ்சய் சர்மா, பிரதமர் மோடி மீது குற்றம் சாட்டினார்.
இந்த நிலையில் ‘4-PM’ என்ற யூடியூப் சேனலின் ஆசிரியர் சஞ்சய் சர்மா, ‘பத்திரிகை சுதந்திரம் மற்றும் பொது தகவல் அணுகல் மீதான தாக்குதல்’ என்று குற்றம் சாட்டி உச்ச நீதிமன்றத்தை அணுகியிருந்தார்.
மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், “யூடியூப் சேனலுக்கு தடை விதிக்கும் முன் எந்த நோட்டீஸும் கொடுக்கப்படவில்லை” என்றார். “மேலோட்டமாகப் பார்த்தால், இது அரசியலமைப்பிற்கு விரோதமானது” என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
இந்த மனுவை நீதிபதிகள் பி.ஆர். கவாய் மற்றும் கே.வி. விஸ்வநாதன் அமர்வு விசாரித்தது. இந்த விவகாரம் குறித்து மத்திய அரசு தனது கருத்துக்களை தெரிவிக்குமாறு கேட்டு, மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்தது.