டில்லி
ரொக்கமில்லா பரிவர்த்தனையை தொடர்ந்து கடன் அட்டைக்கு செலுத்த வேண்டிய பாக்கித் தொகை அதிகரித்துள்ளது.
சுமார் ஒரு வருடத்துக்கு முன்பு பணமதிப்பீடுக் குறைப்பு நடவடிக்கை மோடியால் கொண்டு வரப்பட்டது. அதன் பிறகு ரூபாய் நோட்டுக்கள் தட்டுப்பாடு அதிகரிக்கவே ரொக்கமில்லா பரிவர்த்தனை அதிகரித்தது. இதில் டெபிட் கார்டு மூலம் செலவு செய்வோருக்கு வங்கியில் உள்ள பணத்தைத் தாண்டி செலவு செய்ய முடியாது என்பதால் செலவு கட்டுக்குள் இருந்தது. ஆனால் க்ரெடிட் கார்டு எனப்படும் கடன் அட்டைகளில் செலவு செய்வோருக்கு ஒரு கட்டுப்பாடு இல்லாமல் உள்ளது.
இதனால் க்ரெடிட் கார்டுகள் வைத்திருப்போர் மேலும் மேலும் செலவு செய்துள்ளனர். ஆனால் திருப்பித் தரும் தொகையானது வழக்கம் போலவே அளித்ததால் பாக்கித் தொகை அதிகரித்துள்ளது. பலரும் ரொக்கமில்லா பரிவர்த்தனையை ஒட்டி புது கடன் அட்டைகள் பெற்றுள்ளனர். இதுகுறித்து ரிசர்வ் வங்கி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், “ஆகஸ்ட் 2016ல் 26.39 மில்லியன் கடன் அட்டைகள் புழக்கத்தில் இருந்தன. அது ஆகஸ்ட் 2017ல் 32.66 மில்லியனாக அதிகரித்துள்ளது. இதனால் கடன் அட்டைகள் உபயோகமும் அதிகரித்துள்ளது. இந்த கடன்களுக்கு மாதத்துக்கு சுமார் 3.5% வட்டி வசூலிக்கப் படுகிறது. அத்துடன் அதற்கு மேல் 18% ஜி எஸ் டி யும் வசூலிக்கப் படுகிறது. இதனால் மொத்தம் செலுத்த வேண்டிய தொகை அதிகரித்துள்ளது. ஆனால் பணம் செலுத்துவோர் முன்பு செலுத்திய அளவே செலுத்தி வருகின்றனர். அதனால் பாக்கித் தொகையும் அதிகரித்துள்ளது. செப்டம்பர் 2016ல் கடன் அட்டைகள் மூலம் வர வேண்டிய தொகை ரூ.43200 கோடியாக இருந்தது. ஆனால் செப்டம்பர் 2017ல் ரூ. 59000 கோடியாக உயர்ந்துள்ளது.” என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.