டெல்லி: பாகிஸ்தானின் பாலகோட் முகாம் இயங்கி வருவதாகவும் இந்தியாவில் தாக்குதல் நடத்த 27 தீவிரவாதிகள் பயிற்சி பெற்று வருவதாகவும் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
பாகிஸ்தானை தளமாக கொண்ட தீவிரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமது கடந்த பிப்ரவரியில் புல்வாமாவில் பயங்கர தாக்குதலை நிகழ்த்தியது.
அதில், 40 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதல் இந்தியாவை கொந்தளிக்க வைத்தது. இதையடுத்து அதற்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் செயல்பட்டு வந்த தீவிரவாதிகள் முகாமை சர்ஜிக்கல் தாக்குதல் மூலம் அழித்தது.
இந்திய விமானப்படை விமானங்கள் சரமாரியாக குண்டு மழை பொழிந்து முகாம்களை அழித்தன. இந்த தாக்குதலில், அங்கிருந்த 300 தீவிரவாதிகள் உயிரிழந்தனர். முகாமும் முற்றிலும் அழிக்கப்பட்டது.
இந் நிலையில், ஓராண்டாக செயல்படாமல் இருந்த முகாம்கள் தற்போது செயல்பட தொடங்கியுள்ளதாக இந்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. முகாமில் 27 தீவிரவாதிகள் பயிற்சி பெற்று வருவதாகவும், அவர்களுக்கு ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு தலைவர் மசூத் அசாரின் உறவினரான யூசப் அசார் பயிற்சியளித்து வருவதாகவும் உளவுத்துறை தெரிவித்துள்ளது.
முகாமில் பயிற்சி பெற்ற தீவிரவாதிகள் மூலம் இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 40 ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகள் இந்தியா மீது புதிய தாக்குதலுக்கான ஏற்பாடுகள் தொடங்கி உள்ளன.
தற்போது காஷ்மீர் பள்ளத்தாக்கில் 100 க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் செயல்பட்டு வருவதாக நம்பப்படுகிறது. அவர்களில் 59 பேர் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை சேர்ந்தவர்கள். 37 பேர் ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் 6 பேர் ஹிஸ்புல் முஜாஹிதீனை சேர்ந்தவர்கள் என்று இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.