மும்பை
பாஜக மற்றும் அக்கட்சியின் இந்துத்வா குறித்து சிவசேனா நிறுவனர் கடந்த 2011 ஆம் ஆண்டு பால் தாக்கரே கருத்து தெரிவித்துள்ள வீடியோ டிவிட்டரில் வெளியாகி உள்ளது.
சிவசேனா நிறுவனரான பால் தாக்கரே கடந்த 2012 ஆம் வருடம் மரணம் அடைந்தார். அவர் அதற்கு ஒரு வருடம் தேசிய தொலைக்காட்சியான டைம்ஸ் நவ் தொலைக்காட்சிக்குப் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அவர் தனது பேட்டியில் பாஜகவின் இந்துத்வா மற்றும் சிவசேனாவுக்கும் பாஜகவுக்கும் உள்ள உறவின் எதிர்காலம் குறித்து கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
அந்த பேட்டி விவரம் வருமாறு
பேட்டியாளர் : தற்போது இந்துத்வா கொள்கைக்கான ஆதரவு மிகவும் குறைந்து வருகிறதா? இது குறித்து பாஜக தெரிவித்தததும் நீங்கள் தெரிவித்ததும் இன்றைக்கு ஒத்து வருமா?
பால் தாக்கரே : என்னிடம் பாஜக பற்றி எதுவும் கேட்க வேண்டாம் இந்து மதம் குறித்த எனது கருத்தும் அவர்களுடைய கருத்தும் வேறுபட்டதாகும். நான் இதை வேறு கோணத்தில் பார்க்கிறேன். நான் இதை அரசியல் காரணங்களுக்கு பயன்படுத்துவதில்லை. நான் எனது மனம் எனது நாடு இந்துஸ்தான ஆகியவற்றுக்கு மட்டுமே பயன்படுத்துகிறேன்.
பேட்டியாளர் : அரசியல் ரீதியாக அது இன்று சரிப்பட்டு வருமா? மத அடிப்படையில் மக்கள் வாக்களிப்பார்களா?
பால் தாக்கரே : மக்கள் இது பற்றி எல்லாம் கவலை கொள்வதில்லை. அவர்கள் மகிழ்வுடன் வாழ விரும்புகின்றனர். அவர்கள் தங்கள் வாழ்க்கையில் மட்டுமே அக்கறை கொண்டுள்ளனர்.
பேட்டியாளர் : உங்களுக்கு அரசியலில் அவர்களுடன் கூட்டணி உள்ளதா?
பால் தாக்கரே : அரசியலில் யாரும் யாருக்கும் நெருக்கமாக இல்லை. யாருக்கும் நெருக்கம் கிடையாது. அரசியலில் நெருக்கம் என்பதே கிடையாது. கூட்டணிகள் வரும், போகும். ஆனால் நெருக்கம் என்பதன் அர்த்தமே வேறு. நெருக்கமாக இருப்பவர்களுக்கே கதவை அடைக்கவும் நேரிடலாம்.
பேட்டியாளர் : நீங்கள் கொள்கையளவில் பாஜவுடன் நெருக்கமாக இருக்கிறீர்களாமே அப்படியா?
பால் தாக்கரே : இந்த புதிய தலைமுறையுடன் நெருக்கம் இல்லை. வாஜ்பாய் இருந்த போது, அத்வானி இருந்த போது அதாவது 20 வருடங்களுக்கு முன்பு நெருக்கம் இருந்தது. இப்போதைய கதையே வேறு. இப்போதுள்ள மக்கள் எல்லாம் எனக்கு முன்பு புதுமுகங்கள் ஆவார்கள்.
பேட்டியாளர் : நீங்கள் கொள்கை அளவில் இப்போதும் பாஜகவுடன் நெருக்கமாக உள்ளீர்கள் தானே?
பால் தாக்கரே : அரசியலில் கொள்கை என்பது கிடையாது. அது வரும், போகும்.
பேட்டியாளர் : எனது கேள்விக்கு நீங்கள் பதில் அளிக்கவில்லை. பாஜகவுடன் நீங்கள் நெருக்கமாக உள்ளதாகத் தெரியும் போது பாஜக மற்றும், சிவசேனா கூட்டணி தொடருமா?
பால் தாக்கரே : தற்போது அதிகாரத்தில் உள்ளவர்கள் பாஜகவைப் பொறுத்தவரை புதிய தலைமுறையினர். நான் உண்மையில் பழைய காவலன். ஆனால் இதை நீங்கள் உத்தவ் தாக்கரேவிடம் கேட்கலாம். உத்தவ் மற்றும் நிதின் கட்கரி போன்ற புதிய தலைமுறையினர் கை கோர்ப்பார்களா என்பதை அவர்கள் கூற வேண்டும். ஆனால் என்னைப் பொறுத்தவரை அது நடக்காது
இவ்வாறு பால் தாக்கரே தெரிவித்துள்ளார்.
Thanx : Times Now